மீலாதுன் நபீ பற்றிய தெளிவுகள்.
Posted by islamiyailakku on 8:30 AM
அஸ்ஸலாமு அலைக்கு.
எமது இஸ்லாமிய இலக்குக்காக மதிப்பிற்குரிய சகோதரர் இப்னுல் ஜுனைத் அவர்களால் அனுப்பப்பட்ட ஆக்கத்தை உங்களின் பார்வைக்காய் எமது இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவருக்கு எமது நன்றிகள்.
புனித றபீஉனில் அவ்வல் வந்து விட்டால் முஸ்லிம்கள் மத்தியில் இது எம் பெருமானார் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் என்ற உணர்வும்,அறியாமை இருள் நீக்கி உம்மத்தினரை ஒளி பெறச்செய்த மா நபீ புகழ் பாடி விழாக் காணும் வழக்கமும் இருந்து வருகின்றது. மாறாக தமது அறியாமையின் காரணத்தால் இதை இஸ்லாத்தின் பார்வையில் நூதன செயல் என்று போலிப் பிரச்சாரங்களில் காலத்தை வீணாக்கக் கூடியவர்களும் உள்ளனர். இவர்கள் கூறக்கூடிய குற்றச்சாட்டுக்களையும் அதற்கான தெளிவையுமே இங்கு நாம் தருகின்றோம்.
• நபீ (ஸல்) அவர்களோ ,ஸஹாபாக்களோ மீலாத் விழா கொண்டாடவில்லை.
முதலில் நபீ(ஸல்) அவர்களைப்பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும் . தான் பிறந்ததையிட்டு பெருமை அடித்துக் கொள்வதற்கோ ,அல்லது அதையிட்டு மற்றவர்களைக் கொண்டாடச் செய்விப்பதற்கோ அவர்கள் ஒன்றும் பெருமை அடிக்கக் கூடிய தற்பெருமை பிடித்தவர்கள் அல்லர். ஆனால் தன்னுடைய சபையில் அவர்களுக்கு முன்னால் அவர்களைப் புகழ்ந்து கவிபாடிய ஸஹாபாக்களை தடுக்கவும் இல்லை, விரட்டவும் இல்லை. இவர்களில் குறிப்பாக ஹஸ்ஸான் இப்னு தாபித் (றழி) , அப்துல்லாஹ் இப்னு றவாஹா (றழி) , கஃப் இப்னு ஸூகைர் (றழி) போன்றோரைக் குறிப்பிடலாம்.
ஒருவருக்கு குழந்தை பிறந்தமைக்காக அகீகா கொடுப்பதை மார்க்க மாக்கிக் கொள்ளும் இவர்கள் தான் பிறந்ததற்காக நபீ (ஸல்) அவர்கள் தனக்குத் தானே அகீகா கொடுத்ததை ஏன் புரிய வில்லை? இதுதான் மீலாத். முதலில் மீலாத் மீலாத் எனும் சொல்லின் ,அர்த்தத்தையேனும் புரியவேண்டும். மெளலித் ஓதி கொண்டாடினால்தான் தவறு, மீலாத்போட்டி நகழ்ச்சி மற்றும் தேசிய மீலாத் விழா இவைகளெல்லாம் தவறில்லையா?
• இஸ்லாத்தின் பெயரால் யூதர்களால் உருவாக்கப்பட்டது.
நபீ (ஸல்) அவர்களின் காலத்தில் யஹூதிகள் நோன்புற்றதை கண்ட நபீ அவர்கள் , ஸஹாபாக்களை நோக்கி ஏன் இவர்கள் நோன்பு நோற்கின்றார்கள்? எனக்கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள் அவர்களின் நபீ மூஸா (அலை) அவர்களை நினைவுபடுத்தி அவர்களின் நபீமார்களின் வெற்றிகளை நினைக்கும் முகமாக நோற்கிறார்கள். என பதிலளித்தார்கள். அப்போது நபீ (ஸல்) அவர்கள் இவர்களை விட மூஸா (அலை) அவர்களை நினைவு படுத்துவதற்கு நானே மிகத்தகுதியானவன் எனக் கூறி ஆஸூறா தினத்தில் நோன்புவைத்தார்கள் . இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் இருந்தால் 9ம் நாளையும் சேர்த்து நோன்புவைப்பேன் என்றும் கூறினார்கள் . ஆகவே இவர்கள் கூறுவது போல யூதர்களால் உருவாக்கப்பட்டாலும், எவரால் உருவாக்கப்பட்டாலும் நற்செயல்களை செய்ய முடியும் அதற்காக நாங்களும் அக்கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று வந்துவிடாது . கிறிஸ்மெஸ் ,வெஸாக் போன்ற அந்நிய மத சடங்குகளுக்கு ஒப்பானது. என்ற கண்ணோட்டத்தில் மீலாத் விழாக்களையும் நோக்க முடியாது. இருவரும் விழாக்கொண்டாடுகிறோம். ஆனால் அவர்கள் சிலை போன்ற ஹறாமாக்கப்பட்டவைகளை உபயோகிப்பதன் மூலம் எம்மை விட்டும் வேறுபடுகிறார்கள்.
• பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?
இறந்திருந்தால்தானே இறந்தநாள் என்று சொல்லமுடியும். எம்மை விட்டு மறைந்து வாழும் கருணை நபீ (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. நபீ (ஸல்) அவர்கள் மீது சொல்லப்படுகிற ஒவ்வொறு ஸலவாத்தையும் ஒரு மலக்கின் மூலம் எத்திவைக்கப்படுகின்றது . மரணித்த ஒருவருக்கு எவ்வாறு எத்திவைக்கப்படும்? நபீ (ஸல்) அவர்கள் எம்மைவிட்டும் மறைந்தாலும் எங்களிலேதான் இருக்கிறார்கள். وَاعْلَمُوْا أَنَّ فِيْكُمْ رَسُوْلَ اللهِ “நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் உங்களிலேயே இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
- மௌலித் ஓதுதல்:- வரம்பு மீறிய கருத்துக்களை உள்ளடக்கியிருப்பதால் மார்க்கத்திற்க்கு முரணானது.
மௌலித் என்பது நபீ (ஸல்) அவர்களை புகழ்ந்து பாடுதலையே இங்கு குறிக்கும். நபீ (ஸல்) அவர்களின் காலத்திலும் அவர்களின் சபையிலேயே அவர்களின் தோழர்களான ஹஸ்ஸான் இப்னு தாபித் (றழி) , கஃப் இப்னு சுஹைர் (றழி) ,அப்துல்லாஹ் இப்னு றவாகா (றழி) போன்றோர் நபீ புகழ் பாடி இருக்கிறார்கள். ஆகவே பள்ளிவாயலினுல் புகழ் பாடக் கூடாதென்பதில்லை.
- மௌலித்களில் காணப்படும் வரம்பு மீறிய கருத்துக்கள், நபீ (ஸல்) அவர்களிடம் உதவிதேடல் . சிரிஷ்டிகளிடத்தில் உதவிதேடல் கூடாது.
அல்லாஹ்விடம்தான் உதவிதேடவேண்டும் என்பது இவர்களின் வாதம். இது இவர்களின் மடமையையே சுட்டிக்காட்டுகின்றது . وَهُوَ خَيْرُ النَّاصِرِيْنَ. “அவன் உதவிசெய்பவர்களில் மிக்கமேலானவன்” எனவே உதவிசெய்யக் கூடிய பலர் உள்ளனர். என்பதையே இவ்வசனம் எடுத்துக்காட்டுகின்றது. மாறாக உயிரோடு உள்ளவர்களிடத்தில் கேற்கலாம் எம்மை விட்டும் மறைந்தவர்களிடத்தில் உதவிகேற்க முடியாது. என்றுசொன்னால் அதுவும் தவறான ஒன்றாகும். ஏனெனில் உயிரோடு உள்ளதும் சிரிஷ்டிதான் மரணித்த ஒன்றும் சிரிஷ்டிதான். இறைவன் புறத்தில் இரண்டும் சமமே! .
• நபீ (ஸல்) அவர்களிடம் பாதுகாப்புத்தோடல் .
பயங்கரவாதிகளின் தீங்கிலிருந்து விடுபட படை வீர்ர்களின் பாதுகாப்பை நாடுகிறோம். சுற்றுச் சூழலில் உள்ளவற்றின் தீங்கிலிருந்து விடுபட காலத்திற்கு ஏற்ற நவீன வீடுகளைக் கொண்டு எம்மை பாதுகாக்கின்றோம். நோய்களில் இருந்து பாதுகாப்புப்பெற நல்ல உணவுகளையும், ஊட்டச் சத்துக்களையும் உண்ணுகின்றோம், பருகுகின்றோம். இவைகளை எல்லாம் விட எம்பெருமானார் (ஸல்) அவர்கள் மேலானவர்களே!.
• அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புதல் .
“இறுதி நாள் எப்போது வரும் என்பதையும், மழை பொழிவிப்பதையும், கருவரையில் உள்ளவற்றையும் இறைவனே அறிவான் எந்த ஒரு ஆத்மாவும் நாளை எதை சம்பாதிக்கும் என்பதையும், எந்த இடத்தில் மரிக்கும் என்பதை அறியாது”. இன்றைய நவீன உலகில் மேற்கூறிய இறைவசனத்தில் உள்ளவைகளுக்கு மாற்றமாக கருவரையில் என்ன குழந்தை உள்ளது என்பதையும் வானிலை அறிக்கைகளையும் முன்னரே அறியக் கூடியதாக உள்ளது. இத்திரு வசனத்தின் விளக்கம் புரியாமல்; யாருக்கும் மறைவான ஞானம் இல்லை என்று முட்டால்தனமாக கூறமுடியாது. வயிற்றில் இருக்கும் சிசுவை காட்டித்தரும் ஸ்கேனிங் கருவியை விட நபீ (ஸல்) அவர்கள் தாழ்வானவர்களா? ஒவ்வொரு மனிதனிடத்திலும் இதையெல்லாம்விட பெருமதி மிக்க ஸ்கேனர் ஒன்று உண்டு . அதுதான் “கல்பு” அது ஒளி உடையதாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் எதையும் அறிய முடியும் .
• நூதனச்செயல்
மௌலித் ஒதுதல் புதிதாக உருவாக்கப்பட்ட நூதனச்செயல் ஆகவே! كُلُّ بِدْعَةٍ وكل ضلالة في النار. “நூதன செயல்கள் யாவும் வழிகேடு. வழிகேடு எல்லாம் நரகத்தையே சென்றடையும்” என்ற நபி மொழிக்கமைய மௌலித் ஓதுதல் கூடாது என்பது இவர்களின் வாதமாகும். மௌலித் நிகழ்வுகளை அனுஅனுவாக எடுத்துப்பார்த்தாலும் அதில் எவ்வித நூதனமும் கிடையாது. இவர்களுக்கு அறியாமையின் காரணத்தால் நூதனம்போல் தெரிகிறது. இன் நிகழ்வுகளில் அல்-குர்ஆன் வசனங்களில் சிலதை ஓதுதல், நபீ புகழ் பாடல் ,பிராத்தனை செய்தல், அன்னதானம் வழங்கள் இவைகளில் எதுவுமே நூதன செயலாக கறுதப்பட மாட்டாது. இவ்வாறான நற்கிரிகைகள் அனைத்துமே ஒரே சபையில் நடைபெறும் சிறப்புத்தான் மௌலித் ஓதுவதில் உண்டே தவிர நூதனம் எதுவும் கிடையாது. ஆகவே மெளலித் ஓதுபவர்கள் , மீலாத் கொண்டாடுபவர்கள் யூதர்களை பின்பற்ற வில்லை அதை மறுப்பவர்களே அவர்களின் மாய வலையில் சிக்குண்டு எமது மார்க்கத்தையும் எம்பெருமானாரையும் கேவலப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இஸ்லாமிய இலக்குக்காக
இப்னுல் ஜுனைத்
Categories: Article
