ஹிக்மத் என்றால் என்ன?

Posted by islamiyailakku on 2:35 PM

 சிந்தித்தால் சந்திப்பாய். (தொடர் கட்டுரை)
அன்பினிய சகோதரா!
உனக்கு ஒரு முக்கியம் விடயம் ஒன்றை கற்றுத்தர விரும்புகிறேன். இவ்விடயத்தை நீ தெரிந்துகொள்வது கட்டுரையில் நான் கூறப்போகும் விடயங்களை நீ விளங்கிக் கொள்வதற்கும் ஞானமென்று சொல்வது கேட்டு வெறிநாய் போலும் விஷப்பாம்பு போலும் சீறிப்பாய்ந்து ஞானமா? ஆணமா? என்று இறை ஞானத்தைக் கிண்டல் செய்யும் நயவஞ்சகர்களை மடக்குவதற்கும் உனக்குப் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். 

இக்கட்டுரையில் "வஹ்ததுள் வுஜூத்" இறைஞானம் பற்றியே எழுதுகிறேன். இந்த ஞானம்தான் "ஹிக்மத்" , "இல்முல் ஹிக்மத்" என்ற பெயர்களால் அழைக்கப் படுகிறது. எனவே இது பற்றி நீ முதலில் தெரிந்துகொள். 



"ஹிக்மத்" என்பது அறபுச் சொல்லாக இருந்தாலும் இச் சொல்லை படித்தவர்களும் பாமரர்களும், ஆண்களும், பெண்களும் அடிகடி சொல்லுவதுண்டு. அவர்கள் இச்சொல்லின் அர்த்தம் புரிந்து சொல்கிறார்களா புரியாமல் சொல்கிறார்களா என்பது கேள்விக்குரிய ஒன்றுதான்.


எனினும் நான் அறிந்தவரை மார்க்கம் படித்த மகான்கள் உட்பட ஒரு சிலர் தவிர எல்லோரும் இச் சொல்லின் உண்மையான அர்த்தம் ஒன்றிருக்க அதை விளங்கிக் கொள்ளாமல் வேறோர் அர்த்தங்கோண்டுதான் இதை சொல்லிவருகிறார்கள். 

சோதரா! 
உன்னிலை என்ன? நீ இச்சொல்லை சொல்வதுண்டா? சொல்பவன் என்றால் என்ன அர்த்தங்கொண்டு சொல்கிறாய்? சொல்லமுடியுமா? அல்லது தயக்கமா? தயங்காமல் சொல் அல்லது நான் சொல்வதைக் கேள்.

நீ யோசிக்காதே. நீயும் மற்றவர்கள் போல இச்சொல்லின் அர்த்தம் ஒன்றிருக்க வேறோர் அர்த்தங்கொண்டுதான் சொல்லிவருவாய் என்று நம்புகிறேன். இதில் ஐயமில்லை. நான் சொல்வது சரியா?

நீயும் மற்றவர்களும் இச்சொல்லுக்கு வைத்துள்ள அர்த்தத்தை நானே சொல்லிக் காட்டுகின்றேன்.

"
ஹிக்மத்" என்றால் தந்திரம், உபாயம் என்றுதான் நீயும் பொருள் சொல்வாய். மற்றவர்களும் அவ்வாறுதான் பொருள் சொல்கிறார்கள் நான் சொல்வது சரியா? இல்லையா?

உலக விவகாரத்தில் தந்திரமும், உபாயமும் உள்ள ஒருவனை அவன் பெரிய "ஹிக்மத்"  உள்ளவன் என்றும், அவன் சரியான "ஹிக்மத்" காரனென்றும் நீ சொல்வதுண்டா இல்லையா? உன்னைப்போன்று மற்றவர்களும் சொல்லக் கேட்டதுண்டா இல்லையா?

"
ஹிக்மத்" என்ற சொல்லுக்கு தந்திரம், உபாயம் என்று பொருள் சொல்வது முற்றிலும் பிழையானதாகும்.

ஏனெனில்; தந்திரம்,உபாயம் என்பது இஸ்லாத்தில் இகழப்பட்டதே அன்றிப் புகழப்பட்டதல்ல. அதே போல் தந்திரமுள்ளவனும் இகலப்பட்டவனே அன்றிப் புகழப்பட்டவனல்லன். தந்திரம், உபாயம் என்பதற்கு அறபு மொழியில் ஹீலா, ஹீலத் என்று சொல்லப்படும். இது "தஃலப்" எனும் நரியிடம் உள்ள ஒரு விசேட தன்மையாகும். இத்தன்மை இகழப்பட்டதே அன்றி புகழப்பட்டதல்ல. இக்குணம் நரிக்குணம் ஆதலால் இதை இஸ்லாம் வரவேற்கவில்லை.

அல்லாஹ் திருக்குர்ஆனில்
" ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة" 
(உத்உ  இலா ஸபீலி றப்பிக பில் ஹிக்மதி வல் மவ்யிளத்தில் ஹஸனதி) 
நபியே! உங்களின் றப்பின் வழிக்கு "ஹிக்மத்"தைக் கொண்டும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழையுங்கள் என்றும் கூறியுள்ளான். 
அல்குர்ஆன்: 16 :125 

அன்பினிய சோதரா!
மேலே நான் கூறிக்காட்டிய திரு வசனத்தில் அல்லாஹ்வின் வழிக்கு "ஹிக்மத்" கொண்டும், அழகிய உபதேசம் கொண்டும் மக்களை அழைக்குமாறு அல்லாஹ் கட்டளை இட்டுள்ளான். "ஹிக்மத்" என்ற சொல்லின் அர்த்தம் உனக்குத் தெரியாவிட்டாலும் அது இகழப்பட்ட தந்திரம் என்ற அர்த்தமுள்ளதில்லை என்பதை இத்திரு வசனத்தின் மூலம் நீ புரிந்துகொள்கிறாய் அல்லவா?



ஏனெனில் அல்லாஹ்வின் வழியின் பக்கம் அழைப்பது ஒரு புனிதமான வேலை. புனிதமான பனி செய்வதற்கு தந்திரமும் தேவை இல்லை மந்திரமும் தேவை இல்லை. புனித பணி செய்ய இகழப்பட்ட தந்திர வழிபொருத்தமும் இல்லை.

எனவே மேலே சொன்ன திரு வசனத்திலே வந்துள்ள "ஹிக்மத்" என்ற சொல்லுக்கு தந்திரம் என்று கருத்துக் கொள்ளுதல் பிழை என்பது உனக்குத் தெளிவாகி விட்டதல்லவா.

"
ஹிக்மத்" என்ற சொல்லுக்கு தந்திரமென்று பொருள் கொள்ளக் கூடாது என்பதற்கு மேலே நான் கூறிக்காட்டிய ஆதாரம் ஒன்று மட்டும் உனக்குப் போதும். எனினும் உனது அறிவு வளர்ச்சி கருதி இன்னுமொரு ஆதாரம் கூறுகிறேன்.

                                               وَمَن يُؤْتَ الحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْراً كَثِيراً
எவருக்கு "ஹிக்மத்" கொடுக்கப் படுகியதோ அவர் அதிகம் நன்மை வழங்கப்பட்டவராவார். 

ஹிக்மத் என்ற சொல்லுக்கு உனக்கு அர்த்தம் விளங்காவிட்டாலும் மேலே சொன்ன திரு வசனத்திலுள்ளது போல இச்சொல்லுக்குத் தந்திரமென்ற  அர்த்தமில்லை என்பது தெளிவானதே.

ஏனெனில்; தந்திரமென்று பொருள் வைத்துக் கொண்டால் தந்திரம் கொடுக்கப்பட்டவன் ஒரு போதும் அதிகம் நன்மை வழங்கப்பட்டவனாக இருக்கமாட்டான். அவ்வாறிருப்பது நியாயமுமில்லை.தந்திரமென்னும் இகழப்பட்ட பண்புள்ளவன் தீமை வழங்கப்பட்டவனே அன்றி அவன் நன்மை வழங்கப்பட்டவனாக இருக்கமாட்டான். 

இவ்விரு வசனத்திலிருந்தும் "ஹிக்மத்" என்பது தந்திரம் என்ற அர்த்தமுள்ளதில்லை என்பது அவன் நன்மை வழங்கப்பட்டவனாக இருக்கமாட்டான்.


சோதரா!
நான் இதுவரை கூறி வந்த விளக்கங்களிலிருந்து "ஹிக்மத்" என்ற சொல்லுக்கு தந்திரமென்று பொருள் கொள்வது பிழை என்று உனக்கு விளங்கி இருக்கும். இப்போது ஹிக்மத் என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் பற்றி நான் உனக்குச் சொல்லித் தருகிறேன். கவனமாய்க் கேள். 


"
ஹிக்மத்" என்ற சொல்லுக்கு இறை ஞானிகள் தரும் விளக்கத்தை முதலில் சற்று கவனி.

"அல் ஹிக்மது இல்முன் யுப்ஹது பீஹி அன் ஹகீகதி குள்ளி ஷெய்யின்"

"ஹிக்மத்" என்பது ஒவ்வொரு வஸ்துவின் எதார்த்தம் பற்றி ஆராயப்படும் ஒரு அறிவு.

இவ்வரைவிலக்கணப் படி எந்த அறிவில் ஒவ்வொரு வஸ்துவினுடைய எதார்த்தம் பற்றி ஆராயப் படுகின்றது என்று சிந்தனை செய்து பார்.

தொடரும்...
                
இலங்கை நாட்டில் ஆன்மீக ஒளி பரப்பும் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அஷ் ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் அப்துல் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட நூலில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
Categories: , ,