வாஜிபான மீலாத்.

Posted by islamiyailakku on 3:51 PM
அஸ்ஸலாமு அலைக்கும்.

சர்வ உலக இரட்சகனான அல்லாஹ்வுக்கே சர்வ புகழும். சலவாத்தும் சலாமும் ரஹ்மதுன் லில் ஆலமீன் செய்துனா முஹம்மதுர் ரசூலுல்லாஹி ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீதும். அன்னவர்கள் குடும்பத்தார் சகாபாக்கள் தாபிஈன்கள், தபஉத்தாபிஈன்கள் அனைவர்மீதும் உண்டாவதாக. 

நபி பெருமானார் பிறந்த தினத்தை "முஸ்லீம்களாகிய" நாம் அனைவரும் கொண்டாட இருக்கிறோம். நபி (ஸல்) அன்னவர்கள் பெயரால் உலகின் பல்வேறு இடங்களிலும் இன்று மீலாத் விழாக்கள் கொண்டாடப்பட்டுக்  கொண்டுதான் இருக்கிறது. பெருமானாரின் புகழ் பாடக் கூடிய மீலாத் விழாவை நடாத்துவது மார்கத்தில் "வாஜிபான" கடமை ஆக்கப்பட்ட விடயமா? அல்லது சுன்னத் ஆக்கப்பட்ட விடயமா? அல்லது ஹராமாக்கப்பட்ட விடயமா? என்பதை நாம் ஆராய்ந்து பார்த்தல்; நபிகள் நாயகம் (ஸல்) அன்னவர்கள் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது, அன்னவர்கள் பிறந்த தினத்தில் நாம் மகிழ்ச்சி அடைவது, அந்த மகிழ்ச்சியை பல்வேறு வகையில் வெளிப்படுத்துவது மார்கத்தில் "வாஜிபான", 'பர்லான' கட்டாயக் கடமையான விடயமாகும். 



இதை பித்அத் என்று சிலர் சொல்லிக்கொண்டாலும் ஒவ்வெரு முஸ்லிமுக்கும் தொழுகை, நோன்பு, வசதி உள்ளவர்களுக்கு சக்காத், ஹஜ்ஜு கடமையாக்கப்பட்டுள்ளது போல பெருமானார் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அத்தினத்தில் விழா எடுப்பது "பர்ளு" காட்டாயக்கடமை அதை விட்டவன் தண்டனை பெறுவான் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். 

அல்லாஹ் அவனது திருமறையிலே 
قُلْ بِفَضْلِ اللهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا

அல்லாஹ்வுடைவுடைய சிறப்பையும் ரஹ்மத்தையும்  கொண்டு சந்தோசம் அடைந்து கொள்ளுங்கள் . 
என்று கூறுகின்றான்.

எங்களுக்கு அல்லாஹு நாயன் வழங்கிய அருட்களில், செல்வங்களில் மிகப்பெரிய அருள் நபியுல்லாஹி (ஸல்) அவர்கள் நபியாக, எங்களின் தலைவராக, ரசூலாக, அனுப்பப்பட்டதுதான். இதனைவிட வேறு அருள் எதுவுமே இருக்கமுடியாது. நபியுல்லாஹி (ஸல்) அருள் செய்பவர்களாக அல்ல மாறாக அவர்களே அருள் என்று அல்லாஹு நாயன் கூறி இருக்கிறான். 

وَمَا أَرْسَلْنَاكَ إِلاَّ رَحْمَةً لِلْعَالَمِينَ

(வமா அர்சல்னாக இல்லா ரஹ்மதன் லில் ஆலமீன்)

நபியே உங்களை நாம் ரஹ்மத் தானாகவே அனுப்பியிருக்கிறோம்.என்று

 இந்த வசனத்தை அல்லாஹ் எவ்வாறு கூறி இருக்கவேண்டும் என்றால்.
وما ارسلناك الاَّ رَاحِمََا للعالمين உலக மக்களுக்கு அருள் செய்யக்கூடியவாரக உங்களை அனுப்பினோம் என்று சொல்லிருக்க வேண்டும். அல்லாஹ் ரசூலுல்லாஹ்வைப் பார்த்து அவ்வாறு சொல்லவில்லையே!. (ராஹிம்)  رَاحِم என்றசொல்லுக்கும் (ரஹ்மத்)  رحمة என்ற சொல்லுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருக்கிறது.  رَاحِم  என்றால் அருள் செய்பவர் என்பது அர்த்தமாகும் رحمة  என்றால் அருள் என்று அர்த்தம்.

ரசூலுல்லாஹி
(ஸல்) அவர்கள் அருளாக அனுப்பப்பட்டார்களே அன்றி அருள் செய்பவர்களாக அனுப்பப் படவில்லை என்றால் அதனுடைய அர்த்தம் என்னநபி (ஸல்) அவர்களின் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆனா அத்தனையும், அவர்களது பேச்சுக்களும், அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளும் ரஹ்மாத்தாகவே அமைந்த்திருக்கின்றன என்பதை அல்லாஹ் இந்த திரு வசனம் மூலம் எங்களுக்கு உணர்த்திக் காட்டுகின்றான்.

அல்லாஹ் எமக்கு எத்தனையோ செல்வங்களை எல்லாம் வழங்கி இருக்கிறான். அவற்றை யாரும் கணக்கெடுத்து எத்தனை என்று யாரும் சொல்லமுடியாது.
 
وان تعدوا نعمة الله لاتحصوها 
அல்லாஹ்வுடைய நிஃமத்துக்களை நீங்கள் எண்ணிக் கணக்கிடமுடியாது. 

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு வழங்கப்பட்ட நிஃமத்துக்களில் ரஹ்மத்துக்களில் மிகப்பெரிய  ரஹ்மத். அதைவிடப் பெரிய ரஹ்மத் கிடையவே கிடையாது.

எனவே மேலே சொன்ன قُلْ بِفَضْلِ اللهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا என்ற வசனத்தின் மூலம் அல்லாஹ் சொல்லும் எதார்த்தம் என்ன? நபி பிறந்த (அந்த ரஹ்மத் பிறந்த) தினத்தில் சந்தோசத்தை வெளிப்படுத்துங்கள். நபி பிறந்த மாதத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள் என்பதையே சொல்லுகின்றான்.
நபி பிறந்த மாதத்தில் நாங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதென்றால் நாங்கள் என்ன செய்யலாம்.  விழாக்களை ஏற்பாடு செய்து அந்த விழாக்களிலே நபியுல்லாஹி (ஸல்) அவர்களின் சிறப்புக்களை, தத்துவங்களை, அகமியங்களை, வரலாறுகளை, மக்கள் மத்தியிலே எடுத்துக்கூறி மக்கள் மத்தியிலே நபியுல்லாஹி (ஸல்) அவர்களின் பெருமைகளையும் உணர்வையும் உயர்த்தலாம். புத்தாடைகள் அணிந்தும் வீடுகளை அலங்கரித்து எங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். மெலித் மஜ்லிசை ஏற்பாடு செய்து புகழைப்பாடி மக்களுக்கு அண்ணதானம் வழங்கியும் எங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். 

அல்லாஹுத்தஆலா நீங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள் என்றுதான் சொல்லியிருக்கின்றானே தவிர அந்த மகிழ்ச்சியை எந்த வழியில் எந்த உருவத்தில் வெளிப்படுத்தவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் நல்லடியார்கள், அவ்லியாக்கள், நாதாக்கள், தத்துவ மேதைகள் அந்த மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்தலாம் என்பதற்கு விளக்கம் கூறுகையிலே இப்போது நான் மேலே சொன்ன அடிப்படியில் விளக்கம் சொல்லி இருக்கிறார்கள். 

எனவே நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கிடைத்ததே பெரியதோர் அருள். அதனைவிடப் பெரிய அருள் இல்லவே இல்லை. அந்த அருளுக்காக நாம் மகிழ்ச்சி அடையவேண்டும். ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதத்திலும் ஏனைய மாதங்களிலும் எல்லா நாட்களிலும் புகழ் பாடவேண்டும். அந்தப் புகழைக் கொண்டு நாம் மகிழ்ச்சியடையவேண்டும். 

அல்லாஹ் நாபீகளாரின் மீது  ரபீஉனில் அவ்வல் மாதத்தில் மாத்திரமா புகழ் பாடுகின்றான். ரசூளுல்லாஹ்வைப் புகழ்கின்றான் அவர்களின் பெருமை பேசுகின்றான் இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு மாதமும், வருடம் முழுவதும் பெருமானாரின் புகழைப் பாடிக்கொண்டேதான்  இருக்கின்றான். அவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டேதான் இருக்கின்றான். நாம்தான் ஆண்டுக் கொருதடவை ரபீஉனில் அவ்வல் மாதத்திலே மாத்திரம் விழா எடுக்கிறோம் புகழ்பாடுகின்றோம். 

பள்ளிவாயல்களில் ஐந்து நேரம் ஒலிக்கும் அதானைப் (பாங்கைப்) பாருங்கள். 
اشهد ان محمد الرسول الله  இது யாருடைய ஏற்பாடு? அல்லாஹ் தனது ஹபீபுடைய பெயர் ஐங்காலமும் ஒலிக்கப் படவேண்டும் என்பதை விரும்பி اشهد ان محمد الرسول الله என்பதை பாங்கோடு சேர்த்துவிட்டான். இதை சொல்லாமல் பாங்கு நிறைவேறாது. உலகின் எந்த மூலையிலாவது இந்த வாசகம் இல்லாமல் பாங்கு சொல்லப்படுகிறதா என்றால்; எவராலும் நாங்கள் சொல்லுகின்றோம் என்று கூறமுடியாது? அவ்வாறு சொல்லப்பட்டால் அது ஏற்கப்பட்ட அதானாகவும் இருக்கமாட்டாது. இதில் எந்த ஜமாஅத்தாக இருந்தாலும், எந்த கொள்கை உடையவர்களாக இருந்தாலும் ஏன் பெருமானாரின் புகழ் பாடக்கூடாது என கொக்கரிக்கும் வஹ்ஹாபிகளின் பள்ளிவாயலாக இருந்தாலும் கூட اشهد ان محمد الرسول الله என்பதை சொல்லாமல் பாங்கு சொல்ல முடியாது. 

ஐங்காலமும் ரசூலுல்லாஹ்வுடைய   பெயர் உச்சரிக்கப் படக்கூடிய அளவுக்கு அல்லாஹ் ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்றால் ரசூல் (ஸல்) அவர்களுடைய மகிமையை அல்லாஹ் சுப்ஹானாஹூதஆலா எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டுகின்றான் என்று நாம் சிந்தனை செய்துபார்க்கவேண்டும். 

   من لم يصلي عليكم لا صلاة له

  எந்த ஒரு முஸ்லிம் எந்த நாட்டில் தொழுவதென்றாலும் அவன் எந்தக் கொள்கையுடையவனாக இருந்தாலும் சரியே, வஹ்ஹாபியாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கூட ரசூலுல்லாஹ்வின் மீது சலவாத்துச் சொல்லியே ஆகவேண்டும்.  من لم يصلي عليكم لا صلاة له "எவன் தொழுகையில் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீது சலவாத்துச் சொல்லவில்லையோ அவனுக்குத் தொழுகை இல்லை". சலவாத்துச் சொல்லவில்லை என்றால் தொழுகை நிறைவேறாது என்று புகஹாக்கள் சட்ட மேதைகள் சட்டம் இயற்றி இருக்கிறார்கள். ரசூல் (ஸல்) அவர்களுடைய மகிமையையும் சிறப்பையும் என்னென்று சொல்லமுடியும் சகோதரர்களே! 

 தொழுகை என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமான ஒரு அமல். அதிலே எந்த மனிதனையும் நினைக்கக் கூடாது. அவனது ஞாபகத்தைத் தவிர வேறு எந்த ஒரு சிருஷ்டியின் ஞாபாகமும் நினைவும் வரக்கூடாது என்பதுதான் சட்டம். அப்படி இருக்கும் நிலையில் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களை நினைவு படுத்தவேண்டும், முன்னிலைப் படுத்தவேண்டும்அவர்களை ஞாபகப்படுத்த வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டிருக்கிறது. 

அத்தஹிய்யாத்து ஓதும் நேரத்தில் السلام عليك ايها النبي ورحمة الله وبركاته என்று  சொல்லித்தான்  ஆகவேண்டும். எவன் சொல்லவில்லையோ அவனின் தொழுகை பாத்தில் ஆகிவிடுகிறது. அந்த அளவுக்கு ரசூல் (ஸல்) அவர்களுக்கு கண்ணியம் கொடுக்கப் படுகிறது.

உலகத்தில் 124000 நபிமார்கள் தோன்றினார்கள். இவர்களில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைத்தவிர எந்த ஒரு நபியையாவது தொழுகையில் முன்னிலைப் படுத்தலாம் அல்லது முன்னிலைப் படுத்தவேண்டும் என்று சட்டத்திலே இருக்கின்றதா? இல்லை முன்னிலைப் படுத்தினால் தொழுகை பாத்தில் ஆகிவிடும் என்றுதான் சட்டத்திலே இருக்கிறது. 

ஏன் முக்கியமான நபிமார்கள் என்று அல்குரானிலே பெயர்குறிப்பிடப்  பட்டிருக்கின்ற நபி மூஸா, நபி இப்றாஹீம், நபி இஸ்ஹாக், நபி இஸ்மாயீல், நபி யூனுஸ், நபி யூசுப்  அலைஹிமுஸ்ஸலாம்  இன்னும் எத்தனையோ நபிமார்கள் இருக்கிறார்களே அவர்களை முன்னிலைப்படுத்தி தொழுகையில் எவனொருவன் சலாம் சொன்னாலோ, அழைத்தாலோ அவனது தொழுகை பாழாகிவிடும் என்பதிலே மாற்றம் கிடையாது. 

ஆனால் நபி (ஸல்) அவர்களை முன்னிலைப்படுத்தியே ஆகவேண்டும். முன்னிலைப்படுத்தாவிட்டால் தொழுகை கூடாது. السلام عليك ايها النبي நபியே உங்கள் மீது சலாம். 

நீங்கள் சட்டம் படித்த உலமாக்களிடம் கேட்டுப் பாருங்கள் الخطاب لخلوق يبطل الصلاة "சிருஷ்டியை தொழுகையில் முன்னிலைப் படுத்துவது தொழுகையை பாத்திலாக்கிவிடும்" என்று சட்டம் சொல்வார்கள்.  الاّ النبي محمدا صلى الله عليه وسلم  124000  நபிமார்களில் ரசூல் (ஸல்) அவர்களைத்தவிர என்று சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது. நன்றாக சிந்தித்துப் பாருங்கள் அத்தஹிய்யாத்து ஓதும் நேரத்தில் நபி (ஸல்) அவர்களை முன்னிலைப்படுத்தி السلام عليك ايها النبي ورحمة الله وبركاته என்று சொல்லும் நாங்கள் பின்னால்

اللهمّ صلّ على محمد وعلى آل محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم وبارك اللهمّ على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنّك حميد مجيد.

என்று நபி இப்றாஹீம் (அலை) அவர்களை படர்க்கையாகத்தான் சொல்லுகின்றோமே தவிர முன்னிலைப்படுத்தி சொல்லவில்லை. சட்டம் தடை செய்கின்றது. 

எனவே நேயர்களே இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.

السلام عليك ايها النبي ورحمة الله وبركاته

(அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரமதுல்லாஹி வபறகாதுஹூ)

என்று சொல்லும்போது உங்களுடைய தலைக் கண்ணினால் (முகத்தில் இருக்கும் வெளிக் கண்ணால்) ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களைக்  காணவேண்டும்.அந்த நிலைமை உங்களுக்கு இல்லாமல் போனால் உங்களுடைய மனக்கண்ணினாலாவது எம் பெருமானார் (ஸல்) அவர்களைக் காணவேண்டும். (உங்களது கற்பனைக் கண்ணினாலாவது அவர்களை நீங்கள் காணவேண்டும்.) அவ்வாறு நீங்கள் காணவில்லையானால் உங்களுடைய சலாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. சலாம் ஏற்கப்படாவிட்டால் நீங்கள் ஓதிய அத்தஹிய்யாத்துப் பிழையாகிவிடும். அத்தஹிய்யாத்துப் பிழையானால் தொழுகை பாழாகிவிடும். என்ற அளவுக்கு இமாம் அவர்கள்  சொல்லியிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையிலும் ஐங்காலம்  ஒலிக்கும் பாங்கிலும் நினைவுபடுத்தப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். 

அல்லாஹ் எங்களைப்போல வருடத்தில் ஒரு தரம் தன் காதலரை நினைவுபடுத்தவில்லை. ஐங்காலமும் பகிரங்கமாக அதான் மூலமும் தொழக்கூடிய ஒவ்வொரு மனிதனுடைய நாவுகள் மூலமும் அவர்கள் புகழை உயர்த்தியே வைத்திருக்கிறான். ஸுப்ஹானல்லாஹ்!

நாம் அத்தஹிய்யாத்திலே اسلام عليك ايها النبي ورحمة الله وبركاته (அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரமதுல்லாஹி வபறகாதுஹூ) என்று சொல்லும்போது ரசூலுல்லாஹ்வை நாம் நமது தலைக் கண்ணால் காணவேண்டும் என்று மேலே எழுதினேன். அது எல்லோருக்கும் சத்தியம் ஆகாது. அது அந்தஸ்தில் உயர்ந்த அவ்லியாக்கள் நாதாக்களினாலேயே முடியும். எம்மைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு அது கிடைப்பது சாத்தியமில்லை ஆனாலும் கற்பனைக் கண்முன்னால் பெருமானாரின் உருவத்தை நிறுத்த முடியும். கிதாபுகளிலே அறிஞர்கள் பெருமானார் (ஸல்) அவர்களது உச்சி முதல் கொண்டு அவர்களது வடிவம் எவ்வாறு இருந்தது என்பதை விரிவாக எழுதி இருக்கிறார்கள். அந்த வர்ணனைகளை நாம் கற்பனை செய்து அழகிய ஒரு உருவத்தை எங்களது கற்பனைக் கண்முன் நிறுத்தி இவர்கள்தான் ரசூல் (ஸல்) அவர்கள் என்று நினைத்துக் கொண்டு சலாம் சொல்லவேண்டும். 

எங்களது அந்தக் கற்பனை எதார்த்தம் பெற்று உண்மையாக ஒருநாள் கண்மணி நாயகத்தை காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதனால்தான் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் இதை வலியுறுத்திச் சொல்லி இருக்கிறார்கள். 

ஒருவன் ஒரு  இடத்திலே அமர்ந்து "அஸ்ஸலாமு அலைக்க" அஸ்ஸலாமு அலைக்க" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். அவனுக்கு முன்னாள் யாருமோ இல்லை சொல்லிக் கொண்டு இருக்கிறான். நாம் அந்நிலையில் அவனைப் பார்த்தால் "என்ன பைத்தியக் காரன் போலுள்ளது என்றுதானே சொல்வோம்" ஏன் அவன் தனிமையில் யாருமே இல்லாத இடத்தில் ஒருவரை முன்னிலைப்படுத்திச் சலாம் சொல்லிக் கொண்டிருக்கிறானே! 

இதே நிலைதான் ஒரு அடியான் பெருமானார் முன்னில்லாத நிலையில் அவன் காணாத நிலையில் "அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு" என்று சொல்வது ஆகும் என்று உங்களுக்கு தெளிவாகி இருக்கும். தலைக் கண்ணாலோ மனக் கண்ணாலோ காணாமல் நாம் சலாம் உரைத்தால் பைத்தியக் காரனுக்கும் எமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். 

ஆகவே தொழுகையிலே அவர்களை கண்ணால் கண்டோ அல்லது மனக் கண் முன் அவர்கள் உருவத்தை நிலைப்படுத்தியோதான் சலாம் சொல்லவேண்டும்  என்பதும், ஐந்து நேர பாங்கிலே அவர்கள் பெயர் உச்சரிக்கப் படவேண்டும் என்பதும் உங்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும். 

இன்னும் எங்கு திருக்குர்ஆன் ஓதப்படுகின்றதோ அங்கெல்லாம் நபி நாயகத்தின் புகழ் பாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஏன் தெரியுமா? திருக்குர்ஆன் நபிநாயகத்தின் புகழ் பாடப்படும் புகழ் ஏடு. அதை ஓதும் போதெல்லாம் அவர்களின் புகழ் பாடப் பாட்டுக் கொண்டேதான் இருக்கிறது. 

محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما 4:118

ரசூல் (ஸல்) அவர்களை மட்டுமல்ல அவர்களை அடியொட்டி வாழ்ந்த அருமை சகாபாகளையும் புகழ் பாடி இருக்கிறான் அல்லாஹ் அவனது அருள் வேதத்திலே பார்த்துக்கொள்ளுங்கள். 

அடுத்து "அம்ம" (عم ) ஜூஸ்உவை எடுத்துக் கொண்டால். அதிலும் பெருமானார் புகழை பாடி இருக்கிறான். وَالضٌّحَى وَاللَّيْلِ اِذَا سَجَى مَاوَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى யாரைப்பற்றிச் சொன்னான் அல்லாஹ். எம்பெருமானாரைப் பார்த்துச் சொல்லுகின்றான். நாம் சொல்வதை போலவோ, நாம் புகழ் பாடுவதைப் போலவோ சொல்லவில்லை சத்தியம் செய்து புகழ்கிறான். அவ்வளவு மகிமையும் சிறப்பும் சங்கையும் கொண்டவர்கள் அந்த முத்து நபி (ஸல்) அவர்கள்.  

சத்தியம் பண்ணிப் பேசவேண்டிய நிலைமை அல்லாஹ் ஸுப்ஹானஹூவதஆலாவுக்கு ஏற்படுகிறது. அவர்களின் புகழ் மிகப் பாரதூரமானது என்பதை வெளிப்படுத்துவதற்காக, மடையர்கள், மூடர்கள் அப்போதாவது தெளிவு பெறவேண்டும் என்பதற்காக அல்லாஹ் சத்தியம் செய்து புகழ்கிறான். 

ஏன் சத்தியம் செய்து புகழவேண்டும். அல்லாஹ் அல்லவா புகழ்கிறான் அவன் சத்தியம் செய்யாது புகழ்ந்தாலும் நாம் ஏற்றுக் கொள்வோமா இல்லையா? நாம் ஏற்றுக் கொள்வோம் ஆனால் அல்லாஹ்வின் பேச்சைக் கூட நிராகரிக்கக் கூடிய மடையர்கள் வருவார்கள் என்று அறிந்தே அல்லாஹ் சத்தியம் செய்தே புகழ் பாடிவிட்டான் அந்த கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது. 

والضحى والليل اذا سجى ماودعك ربك وما قلى

காலையின் மீதும் மாலையின் மீதும் ஆணையாக! உங்களை உங்களுடைய றப்பு கைவிடவுமில்லை வெறுக்கவுமில்லை.

واصبر لحكم ربك فانك باعيننا

நபியே! உங்களுடைய இறைவனுடைய தீர்பிற்காக நீங்கள் பொறுமை செய்யுங்கள். நீங்கள் எங்களுடைய கண்களிலே இருக்கின்றீர்கள்.

ولاالاخرة خير لك من الاولى

முந்திய நேரத்தைவிட பிந்திய நேரம் உங்களுக்குச் சிறந்தது.

எப்படியான புகழ் பார்த்தீர்களா! உதாரணமாக எட்டு மணிக்கு ஒரு அந்தஸ்திலே இருந்தார்களே ஆனால் எட்டு மணி ஒரு வினாடியில் அதனைவிட  மேலான ஒரு படியிலேயே இருப்பார்கள். எட்டு மணி இரண்டாவது வினாடியில் அதைவிட மேலான ஒரு அந்தஸ்துக்கு செல்வார்கள். எட்டு மணி மூன்றாவது வினாடிக்கு அதனைவிட மேலான ஒரு அந்தஸ்திலே இருப்பார்கள். 

நபி (ஸல்) அவர்கள் எப்போது பிறந்தார்களோ அன்று முதல் இன்று வரை ஒளி வெள்ளத்திலே உயர்ந்து கொண்டே போகிறார்கள்.  கியாம நாளின் பின்னரும் அவர்கள் அந்தஸ்து கூடியே போகும் குறையாது. 

அவர்களுக்கு கிடைக்கும் இறை தரிசனம் முந்திய வினாடியை விட பிந்திய வினாடியில் அளப்பெரியதாகவே இருக்கும். அவனது வெளிப்பாடு ஒவ்வொரு வினாடிக்கும் ஒவ்வொரு வெளிப்பாடாக தஜல்லீயாக இருக்கும். அதை நாயகம் (ஸல்) அவர்கள் அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம்தான் காணாத குருடர்காளாக இருக்கின்றோம். 

எனவே அன்பான நேயர்களே! ஒவ்வொரு வினாடியும் அந்தஸ்தால் உயர்வடையும் அந்த நபி நாதரை நாம் சிறிய கட்டுரைகளிலோ ஒரு மணி அரை மணி நேரப் பேச்சுக்களிலோ பேசி முடிப்பது புகழ் பாடுவதென்பது அசாத்தியமானதே. 

ஆகவே அந்த மாநபி புகழ் பாடுவது முஸ்லீம்களாகிய எம்மீது கட்டாயக் கடமை. அவர்கள் புகழ் பாடும் கூட்டமாக எம்மை அல்லாஹ் ஆக்கியமைக்கு அவனுக்கே புகழ் அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.


Categories: ,