இரு நிலை உள்ள றசூல்.
Posted by islamiyailakku on 10:00 PM
தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்
நான் உங்கள் போன்ற மனிதனே என்று சொன்ன நாபீகள் கோமான்.
நபீ (ஸல்) அவர்களுக்கு இரு நிலைகள் உள்ளன.
- தங்களை உயர்த்திப் பேசும் நிலை.
- தங்களை தாழ்த்திப் பேசும் நிலை. பணிவை வெளிப்படுத்தும் நிலை.
இவ்விரு நிலைகளில் தங்களை உயர்த்திப் பேசும் நிலையை "ஜலால்" என்றும், தாழ்த்திப் பேசும் நிலையை "ஜமால்" என்றும் சுருங்கச் சொல்லலாம்.
நான் உங்கள் போன்ற மனிதனே என்று சொன்ன நாபீகள் கோமான்.
انا سيد ولد ادم
(நான் ஆதமுடைய மக்களுடைய தலைவன் ) என்றும்,
انا اول من ينشق عنه القبر
(மறுமையில் கப்ருகளிலிருந்து முதன்முதலாக வெளியாகுபவன் நான்தான்)
என்றும் கூறியுள்ளார்கள் என்பதை இங்கு சிந்தனைக்கெடுத்துப் பார்க்கவேண்டும்.மேலே எழுதிக் காட்டிய நபீகள் கோமானின் ஜலால் ஜமால் என்னும் இரு நிலைகளும் அல்லாஹ்விலும் உண்டு.
அல்லாஹ்வின் திருநாமங்களை ஆன்மீக ஞானிகள் இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். ஒன்று அல் அஸ்மால் ஜலாலிய்யா என்றும், மற்றது அல் அஸ்மால் ஜமாலிய்யா என்றும் அழைக்கப்படும்.
"அல் அஸ்மாஉல் ஜலாலிய்யா" என்றால் அதிகாரம், அடக்குமுறை, பழிவாங்கல், தண்டித்தல், வேதனை செய்தல் போன்ற அர்த்தங்கள் தரக்கூடிய திருநாமங்களாகும். அல் கஹ்ஹார், அல் ஜப்பார், அல் முன்தகிம், அல் முதகப்பிர், அல் காபிள், அல் முதில்லு, அல் ஜலீல், அல் கவிய்யு, அல் மதீன் போன்ற வன்மைமிகு திருநாமங்கள் "அல் அஸ்மாஉல் ஜலாலிய்யா" எனப்படும்.
இத்திருநாமங்களின் செயற்பாடுகள் கடுமையானவையாகவும் பயங்கரமானவையாகவும் வேதனைக்குரியவையாகவும் சோதனைக்குரியவையாகவும் இருக்கும்.
அல்லாஹ் அல்குர்ஆனிலே தன்னைப்பற்றிப் பேசும்போது "அன" நான் என்றும் பேசியுள்ளான் "நஹ்னு" நாங்கள் என்றும் பேசியுள்ளான். இதன் ரகசியம் என்னவெனில் "அன" என்று ஒருமையில் பேசியது "ஜலாலிய்யத்" ஆன திருநாமங்களின் பிரதிபலிப்பும் "நஹ்னு" என்று பன்மையில் பேசியது "ஜமாலிய்யத்" ஆன திருநாமங்களின் பிரதிபலிப்புமாகும்.
இவ்வுண்மையை, சூபிஸ தத்துவத்தைப் புரிந்து புரிந்துகொள்ளாமல் "அன" நான் என்று பேசிய நேரம் அவன் ஒருவனாயிருந்தான் என்றும், "நஹ்னு" என்று பேசிய நேரம் அவன் தன்னுடன் உள்வாங்கி ஒரு குறூப்- குழுவாக இருந்தான் என்றும் கண்ணை மூடிக்கொண்டு விளக்கம் சொல்வது முழு முட்டாள் தனமே ஆகும்.
"தஸவ்வுப்" என்ற சூபிஸ ஞானக் கோட்டைக்குள் பிரவேசித்தல் மட்டுமே உண்மையான விளக்கத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.
"அல் அஸ்மாஉல் ஜமாலிய்யா" என்றால் அன்பு, இரக்கம், அருள், ஈடேற்றம், நம்பிக்கை, மன்னித்தல், சிறப்பு போன்ற அர்த்தங்களை தரக்கூடிய திருநாமங்களாகும்.
அர் றஹ்மான், அர் றஹீம், அல் முன்இம், அல் கப்பார், அர் றஊப், அல் பத்தாஹ், அல் அபுவ்வு போன்ற மென்மையும் கருணையுமுள்ள திருநாமங்கள் "அல் அஸ்மாஉல் ஜமாலிய்யா" என்ற பிரிவில் அடங்கும். இத்திரு நாமங்களின் செயற்பாடுகள் அன்பானவையாகவும், திருப்தியானவையாகவும் இருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் நான் உங்கள் போன்ற மனிதன் என்று சொன்னது அவர்களில் அல்லாஹ்வின் "ஜமாலிய்யத்" ஆன திருநாமம் செயற்பட்டதினாலாகும்.
இன்னொரு சமயம் நபி (ஸல்) அவர்கள்.
لا تفضلوني على يونس بن متّى
நபீ யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களைவிட என்னை சிறப்பாக்கி விடாதீர்கள்)
என்று சொல்லியுள்ளார்கள்.
நபீ (ஸல்) யூனுஸ் பின் மத்தாவை விடவும், யூசுப் பின் யஃகூபை விடவும் சிறந்தவர்கள் என்பது இஸ்லாம் கூறியுள்ள தீர்கமான முடிவாகவும், சுன்னத்வல் ஜமாஅத் "அகீதா" கொள்கையாகவும் இருக்க நபீ (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியது தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காகவே அன்றி தங்களின் தாற்பரியத்தை வெளிப்படுத்துவதற்காக அல்ல.
அவர்களின் இப்பேச்சுக் கூட அல்லாஹ்வின் "ஜமாலிய்யத்தான" திருநாம வெளிப்பாட்டைச் சேர்ந்ததேயாகும். இவ்விபரம் தெரியாமல் நபீ (ஸல்) அவர்களே அவ்வாறு சொல்லியுள்ளதால் சிருஷ்டிகளிலும், நபீமார்களிலும் முதலிடம் யூனுஸ் நபீ அவர்களுக்கே கொடுக்கவேண்டும் என்று சொல்வது அறியாமையே ஆகும்.
நான் உங்கள் போன்றவன் அல்லன். எனக்கு உணவு தருபவன் ஒருவன் இருக்கிறான் அவன் எனக்கு உணவு தருகிறான். எனக்குக் குடிக்கத்தருபவன் இருக்கிறான் அவ எனக்குக் குடிக்கத்தருகிறான். என நபீ (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
அதாரம் -புகாரி
அறிவிப்பு - அனஸ் (றழி)
இந்த நபீ மொழி தருகின்ற நான் உங்கள் போன்றவன் அல்லன் என்ற கருத்து நபீ மொழிகளில் பல்வேறு வசனங்களில் கூறப்பட்டிருப்பது ஹதீத்கலை ஆய்வாளர்களுக்கு மறைவானதல்ல. உதாரணமாக:
لست مثلكم. لست كاحد منكم
என்ற வசனங்கள் போன்று.
மேற்கண்ட நான் நான் உங்கள் போன்றவனல்லன் என்ற ஒரே கருத்தைத்தரும் பல வசனங்கள் மூலம் கூறப்பட்டுள்ளதால் நபீகள் கோமான் நம்போன்ற மனிதனல்ல என்பதற்கு இதை விடத்தேளிவான வேறு ஆதாரம் தேவையா.?
இதுவரை எழுதிய விடயங்கள் மூலம் நபீ (ஸல்) அவர்கள் நான் உங்கள் போன்ற மனிதனென்றும், நபீ யூனுஸ் இப்னு மத்தாவைவிட என்னை சிறப்பாக்கி விடாதீர்கள் என்று கூறியது தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்கே. தங்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்துவதற்காக அல்ல என்ற உண்மையும், நான் உங்கள் போன்றவனல்ல என்று கூறியது தங்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்துவதற்காக என்ற உண்மையும் தெளிவாகும்.
انما انا بشر مثلكم
(நான் உங்கள் போன்ற மனிதன்)
என்று திருக்குர்ஆனும், நான் உங்கள் போன்றவனல்லன் என்று நபீ மொழிகளும் கூறுவதால் திருக்குர்ஆன் ஹதீதுக்கும், ஹதீது திருக்குர்ஆனுக்கும் முரணாகிறதென்று எவரும் தடுமாறத் தேவையில்லை. ஒருபோதும் அவ்விரண்டில் ஒன்று மற்றதற்கு முரணாகவே மாட்டாது. இதுவே இஸ்லாமிய கொள்கை. ஆகையால் மேற்கண்டவாறு விளக்கம் பெறும்போது எவருக்கும் எந்த தடுமாற்றமும் ஏற்படாது.
தொடரும்....