கல்பின் தொழுகை.

Posted by islamiyailakku on 8:30 AM
திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் இரண்டு வசனங்கள் வருகிறது. அவ்விரு வசனங்களுக்கிடையிலும் தொடர்பிருக்கிறது. அத்தொடர்பினை உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக இக்கட்டுரையை எழுதுகிறோம். அல்லாஹுத்தஆலா அவனது அருள்மறையிலே கூறுகிறான்.
 حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموالله قانتين  
"நீங்கள் தொழுகைகளின் மீதும் நடுத் தொழுகையின்மீதும் பேணுதலாக இருந்துகொள்ளுங்கள்" என்று கூறுகிறான்.

صلوات என்ற சொல் صلاة என்ற சொல்லின் பன்மைச்சொல்லாகும். صلوات  என்று சொல்லுவதன் மூலம் ஐந்து நேர தொழுகைகளையும் உள்ளடங்கி விடுகின்றது. حافظوا على الصلوات என்று சொன்ன அல்லாஹ் பின்னாலே   والصلاة الوسطى என்று   சொல்லுகிறான்.  நாம் சிந்திக்க வேண்டியது இந்த இடத்திலேதான்.


والصلاة الوسطى "நடுத்தொழுகை"  என்றால் என்னவென்று நாம் அறிந்து அதையும் பேணி செய்வது அவசியமாகும்.

இந்த நடுத்தொழுகை எது என்பது பற்றி இமாம்கள் கருத்துக் கூறும்போது "அஸர்" தொழுகை என்று சிலர் கூறுகிறார்கள். சுபஹு, ழுகர் தொழுகை இவ்விரண்டு தொழுகைகளுக்கும் மஃரிப், இஷா இவ்விரண்டு தொழுகைகளுக்கும்  நடுவிலே இருப்பது அஸர் தொழுகைதான் எனவேதான் அல்லாஹ் அதைத்தான்  صلاة الوسطى என்று கூறுகிறான் என்பது இவர்களின் கருத்து.

இந்த அடிப்படையில் நடுத்தொழுகை அஸர் என்று யோசித்தால் மஃரிபும் இஷாவும் சுபஹும் ழுஹரும் கூட நடுத் தொழுகைகளாக  வர சந்தர்பம் இருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? இஷாவையும் சுபஹையும் ஒன்றாக எடுங்கள் ழுஹரையும்  அஸரையும் ஒன்றாய் எடுங்கள் அப்போது மஃரிப் நடுத் தொழுகையாக வரும். இவ்வாறு பார்க்கப்போனால் ஐந்து நேரத் தொழுகைகளையுமே நடுத் தொழுகைகளாக எடுத்துக்கொள்ள கூடிய சாத்தியம் இருக்கிறது.  

இன்னுமொரு வகையில் இதை நடுத் தொழுகை என்று நாம் சிந்திக்கலாம், இராத்தொழுகை பகல் தொழுகை என்று பார்த்தல்; இராத் தொழுகையிலே மஃரிபும் இஷாவும் சேர்கிறது. பகல் தொழுகையிலே சுபஹும் ழுஹரும் சேர்கிறது எனவே இராத் தொழுகை இரண்டுக்கும் பகல் தொழுகை இரண்டுக்கும் இடைப்பட்டதாக அஸர் வருகின்ற காரணத்தால் அது நடுத் தொழுகையாக கணிக்கப்படும். 

இந்தக் கருத்தையெல்லாம் விட மேலான ஒரு கருத்திருக்கிறது அதையே நாம் 
இங்கு உங்களுக்கு  கூற வருகின்றோம். حافظوا على الصلوات என்ற வசனத்தில் صلوات என்று வருவதன் மூலம் அதற்குள் அஸரும் உள்ளடங்கி விடுகிறது என்பதை சிந்தனை உள்ளவர்களால்  மறுக்கமுடியாது.

ஆனாலும் அஸர் தொழுகைக்கு மற்ற தொழுகைகளைவிட ஒரு சிறப்பு இருக்கிறது. من صلى البردين دخل الجنة "எவனொருவன் குளிரான இரண்டு தொழுகைகளை தொழுதானோ அவன் சுவர்க்கம் போய்விட்டான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  சொன்னார்கள்.  குளிரான இரண்டு தொழுகை என்றால் ஒன்று அஸர் மற்றது சுபஹ். இது இரண்டுமே குளிரான நேரத்தில் இடம்பெறக்கூடிய 
தொழுகையாக   இருப்பதனால் குளிரான தொழுகை எனப்படுகிறது. அது மாத்திரமன்றி அதிகமானவர்கள் சுபஹுடைய நேரம் உறக்கத்திலே இருப்பார்கள் பொடுபோக்கு செய்துவிடுவார்கள். அதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை குறிப்பாக சொல்லி இருக்கிறார்கள். அஸர் தொழுகையின்போது மக்களுக்கு வேலைகள் அதிகமாக இருக்கும். காரணம் அவன் தன் தொழிலிருந்து விடுபடக்கூடிய நேரம் தன் குடும்பத்தினருக்காக உணவுகளை தேடக்கூடிய நேரம்.அதிலும் பொடுபோக்கு செய்துவிடுவான் என்பதற்காக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை வலியுறுத்துவதற்காக இவ்வாறு கூறினார்கள்.

ஆனால் மேலே சொன்ன திருக்குர்ஆன் வசனத்தில் சொல்லப்பட்ட சலாதுல் வுஸ்தா எனப்படுவது அஸர் தொழுகை அல்ல. அப்படியாயின் அது என்ன தொழுகை? என்று ஆராயும் போது சிலர் தஹஜ்ஜுத் தொழுகை என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு சில இமாம்கள் தஹஜ்ஜுத் தொழுகை என்று கருத்து தெரிவித்தாலும் கூட அது கூட பொருத்தமான ஒன்றாகத் தெரியவில்லை. ஏனெனில் தஹஜ்ஜுத்துக்கு முன்னும் பின்னும் எந்த தொழுகைகளுமே இடம்பெறவில்லை அவ்வாறு இருந்திருந்தால் அதை நடுத்தொழுகை என்று கூறி இருக்கலாம்.  இவ்வாறெல்லாம் கூறியிருக்கும் அறிஞர்கள் ளாஹிருடைய வெளிரங்கமான அறிவாற்றல் உள்ளவர்களேயாகும். குர்ஆனையும் ஹதீசையும் மேலெழுந்தவாரியாக ஆராயும் உலமாஉகலே இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள்.

நீருக்கு மேலே நீச்சலடிகாமல் ஆழத்தில் சென்று குழி ஓடக்கூடிய உலமாஉகள் அஸ் சலாதுல் வுஸ்தாவுக்கு வேறு விளக்கம் எழுதி இருக்கிறார்கள். அது என்னவென்றால் "கல்பினுடைய தொழுகை" ஆகும். என்று விளக்கம் கூறுகிறார்கள்.

ஏனென்றால் ஒரு மனிதன் ரூஹு ஜசது என்ற இரண்டும் இணைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறான். ஒருமனிதனில் ரூஹு என்ற ஆன்மாவும் ஜசத் என்ற சடத்துடனும் பிண்ணப்பட்டிருக்கிறது. இந்த ரூஹுக்கும் ஜசதுக்கும் நடுவிலே கல்பு இருக்கிறது. இந்த கல்பினுடைய தொழுகையே சலாதுல் வுஸ்தா என்று வந்துள்ளது.

எங்களது உடலின் தொழுகையே நாம் ஐங்காலம் தொழுகின்ற தொழுகையாகும் அது குறிப்பிட்ட நேரத்தில் அதாவது ஐந்து நிமிடத்திலோ அல்லது 10 நிமிடத்திலோ அது முடிந்துபோகும்.
 
கல்பினுடைய தொழுகை என்றால் அது நிரந்தரமாக தொழுது  கொண்டிருக்கக் கூடிய தொழுகையாகும். அது என்னவென்றால் نسيان ماسوى الله " அல்லாஹ்வைத் தவிர உள்ள அனைத்தையும் மறந்துபோகுதல். அதாவது சிருஷ்டிகளை மறந்து போகுதல். இதை விட சுருக்கமாகச் சொன்னால். சிருஷ்டிகளை ஹக்காக நோக்குதல் ஆகும்.

சிலர் கல்பினால் மட்டும் தொழுதுகொண்டால் போதும் என்று என்னிக்கொண்டிருப்பார்கள். விளக்கமும் சொல்வார்கள். அப்படியாயின் அல்லாஹ்  حافظوا على الصلاة الوسطى "நடுத் தொழுகையின் மீது பேணுதலாக இருந்துகொள்ளுங்கள்" என்றுதான் கூறி இருக்கவேண்டும்.  ஆனால் உடலின் தொழுகையை முக்கியத்துவம் கொடுத்து حافظوا على الصلوات என்றும் கூறி இருக்கிறான். ஆகவே நாம் ஐங்காலம் தொழக்கூடிய தொழுகைகளை தொழுவதோடு மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல் உள்ளத்தினுடைய தொழுகையையும் பேணித் தொழுதுகொள்ளவேண்டும்.

இந்த கல்பின் தொழுகையை எந்த நேரமும் தொழமுடியும் நேர வரையறை ஒன்றும் கிடையாது. உடலுக்குரிய தொழுகைக்கு நேரம் வருவதுமுண்டு நேரம் முடிவடைவதும் உண்டு.

கல்பினுடைய தொழுகை என்பது மேலே சொன்னபடி சிருஷ்டிகளை மறப்பதாகும். அப்படி என்றால் அல்லாஹ்வைத்தவிர உள்ள அனைத்தையுமே மறந்துபோகுதல். அல்லாஹ்வைத்தவிர உள்ள அனைத்தையுமே மறந்தால் ஒரு அடியான் உலகிலே எப்படி வாழ்வது? மனைவியை, வியாபாரத்தை, ஏனைய உலக அத்தியாவசிய நடவடிக்கைகளை மறக்கமுடியுமா? அல்லாஹ்வைத் தவிர உள்ள அனைத்தையும் ஒருவன் மறந்தால் உலகிலே வாழ முடியுமா? என்று நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. மறப்பதென்றால் அவற்றை ஹக்காக நீங்கள் நோக்குங்கள் அப்போது நீங்கள்  சிருஷ்டியை மறந்துவிடுகிறீர்கள் என்பதுதான் அர்த்தம். நீங்கள் பார்க்கும் பொருளை எல்லாம் ஹக்காக பாருங்கள் . அந்தப்பார்வையிலே இருக்கும் பொது நீங்கள் கல்பினால் தொழுதுகொண்டே இருப்பீர்கள்.

இன்னொரு ஆயத்திலே அல்லாஹ் الا المصلين الذينهم على صلاتهم دائمون "தொழுகையிலே நேமமாக இருக்கக் கூடிய தொழக்கூடிய சிலரைத்தவிர" என்று கூறுகிறான். நேமமாக தொழக்கூடிய யாராவது இருக்கமுடியுமா? யாராலும் நேமமாக தொழலாமா? மிஞ்சிப்போனால் ஒரு அரைமணிநேரம் தொழமுடியும் அல்லது பிந்திய இரவிலே சில மணித்தியாலங்கள் தொழுதுகொள்ள முடியும். மாறாக  24 மணிநேரமும் தொழுது  கொண்டிருக்கலாமா ? நபீமார்களோ வலீமார்களோ அவ்வாறு தொழுதிருக்கிறார்களா? கிடையாது. நான்கு ரக்அத் தொழுகை என்றால் நான்கு ரக்அத்தான் தொழுவார்கள். அதன் பின் வீடு சென்றுவிடுவார்கள் . இரண்டு ரக்அத்  என்றால் இரண்டு ரக்அத்தான் தொழுவார்கள் அதன் பின் தமது வேலகளின்பால் சென்றுவிடுவார்கள். ஆகவே யாரும் நேமமாக இருந்ததில்லை.

அப்படித்தான் ஒருவன் 24 மணிநேரமும் தொழுகிறான் என்றால் அவனால் தன்  மனைவிக்குரிய, பிள்ளைகளுக்குரிய கடமைகளையோ அல்லது தமது சொந்த கடமைகள் பணிகளையோ  செய்ய முடியாத நிலையும் உணவு கூட உண்ணமுடியாத நிலையும் ஏற்பட்டுப் போகும்.

ஆகவேதான் தொழுகையில் நேமமாக இருப்பதென்றால் அது கல்பின் தொழுகையை தொழுவதன் மூலமே சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை.

நீங்கள் அறிந்திருப்பீர்கள் நாற்பது வருடங்கள் ஒரு ஊரிலே வாழ்ந்த ஒரு ஞானி; ஒருநாள் குத்பா பிரசங்கத்தின்போது நான் இவ்வூரிலே நாற்பது  வருடங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் ஆனால் நான் இதுவரையும் மனிதர்களைக் காணவில்லை  என்று கூறினார். குத்பாவுக்கு வந்தவர்கள் அனைவரும் ஆத்திரமடைந்து அப்படி என்றால் எங்களையெல்லாம் விலங்குகள் என்றா சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது அந்த ஞானி நான் அல்லாஹ்வைத்தவிர வேறு எதையுமே பார்கவில்லை என்று சொன்னார்கள். இவ்வாறு வாழக்கூடியவர்கள் எந்நேரமும் தொழுதுகொன்டுதான் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலமாக உணரமுடியும்.

எனவே நாம் ஐங்காலமும் தொழவேண்டும் அதிலே தரக்குரைச்சல்  செய்துவிடக் கூடாது. அதனோடு மாத்திரம் நின்றுவிடாமல் எந்நேரமும் அல்லாஹ்வை தொழக்கூடிய கல்பின் தொழுகையையும் பேணுதலுடன் கட்டாயம் செய்தே வரவேண்டும் تفكر ساعة خير من عبادة الف سنة ஆயிரம் வருடங்கள் வணங்குவதைவிட இறை சிந்தனையில் ஒரு நொடி இருப்பது சிறந்தது என்று  நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இந்த ஹதீதின் படி இரவெல்லாம் ஒருவன் நின்று வணங்கினாலும் ஒரு நொடி அல்லாஹ்வைப் பற்றி சிந்தப்பவனே சிறந்தவன் என்பதை உணரமுடிகிறது.

இதை தவறாக நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது. உதாரணமாக ஒரு வியாபாரி எந்நேரமும் அல்லாஹ்வைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் நான் எவ்வாறு வியாபாரம் செய்வது என்று அவன் கேட்கக் கூடாது. ஒருவன் கடைக்கு வருகிறானா நீங்கள்  அல்லாஹ்வை அல்லாத ஒன்றுமில்லை எனவே அல்லாஹ்தான் வருகிறான் என்று எண்ணவேண்டும். அப்போது அல்லாஹ்வுடைய சிந்தனை கல்பின் தொழுகை அங்கே இடம்பெறுகிறது. ரிஸ்களிப்பவன் யார் அல்லாஹ்தனே! சந்தேகம் கிடையாது இவ்வுலகிலே எவராலும்  அல்லாஹ் நேரடியாக என்னிடம் வந்து ரிஸ்களித்தான் என்று சொல்லமுடியாது. எம்மிடம் அப்துல்லாஹ் வருகிறார் பணம் தந்து பொருள் வாங்கிச்செல்கின்றார். முஹம்மத் வருகிறார் பணம் தருகிறார் பொருள் வாங்கிச்செல்கிறார். இவ்வாறு ஒவ்வொரு பெயருடைய ஒவ்வொரு அடியானும் வந்து வாங்கிச்சென்றபின் இறுதியில் பார்த்தால் பணம் இவனிடம் சேர்ந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் நமக்கு இன்று தாராளமாக ரிஸ்களித்துவிட்டான் என்று நாம் சொல்கிறோம். அல்லாஹ் என்று ஒருவன் எங்கோ இருந்து வந்து ரிஸ்களித்ததாக இதுவரை கிடையாது.  ரிஸ்களிப்பவன் அல்லாஹ் என்ற தத்துவப்படி அப்துல்லாஹ்வோ முஹம்மதோ அஹ்மதோ  அந்த ரிஸ்கை அளிப்பதென்பது அசாத்தியம். அப்படியாயின் எதார்த்தத்தில் அவர்களின் உருவில் அவர்களாக வந்து ரிஸ்களித்தது அல்லாஹ் ஒருவனே என்பதை யாரும் மறுக்கமுடியாது.

ஆகவேதான் எமது ஈமானை நாம் பலப்படுத்திக் கொள்வதோடு சலாதுல் வுஸ்தா -நடுத்தொழுகை- எனப்படும் கல்பின் தொழுகையையும் ஐங்காலத் தொழுகைகளோடு பேணி தொழுது கொள்வோமாக. 
Categories: ,