உதவி தேடுதல்.

Posted by islamiyailakku on 8:45 AM
  அன்பின் வாசகர்களே!
உலகிலுள்ள எந்த வஸ்துவுக்கும் பெறுமதி கூறமுடியும். ஆனால் இரண்டு விடயங்களைத்தவிர
  1.          அறிவு 
  2.          நேர்வழி (ஹிதாயத்)
 நபியுல்லாஹி (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களை எமனுக்கு  ராஜ பிரதிநிதியாக அனுப்பியபோது لان يهدي اللهبك رجلا  خير لك من الدنيا وما فيها முஆதே நீங்கள் எமனுக்கு  செல்கிறீர்கள். எமனிலுள்ள மக்களில் ஒருவரை அல்லாஹு தஆலா உங்களைக் கொண்டு நேர்வழிப் படுத்துவது இந்த உலகமும் உலகில் உள்ளவைகளும் உங்களிடம் இருப்பதைவிட சிறந்தது. என்று சொன்னார்கள் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள். அப்படியானால் ஹிதாயத்தின் மதிப்பை நாம் வரையறை செய்ய முடியுமா? இந்த உலகும் அதிலுள்ள அனைத்தும் இருந்தாலும் அதன் பெறுமதிக்கு ஈடாகுமா? ஆகவே நேர்வழிக்கு பெறுமதி கூறி மட்டிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதே விதமாக "இல்மு" அறிவிற்கும் யாரலும் விலை மதிப்பிட முடியாது. அது சாதாரண ஷரீஅத் உடைய அறிவிருந்தாலும் சரி அல்லது இறை அறிவோடு தொடர்புடைய ஒரு அறிவாக இருந்தாலும் சரி அதற்கும் விலை மதிப்பிடவோ, பெறுமதி இடவோ முடியாது. 

ஒருநாள் முஹம்மது (ரஹ்) -ஹனபி மத்ஹபின் மார்க்க அறிஞர் முப்தீ- அவர்கள் ஒரு வழியால் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் அவர்களிடம் பணம் இருக்கவில்லை. அப்போது அவர்களுக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. அவர்களால் தாங்க முடியவில்லை.
வழியிலே ஒருவன் சர்பத் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான். இவர்கள் அவனிடம் சென்று நான் ஒரு மார்க்க அறிஞன் என்னிடம் நிறைய அறிவுகள் இருக்கின்றன. ஆனால் பணம்தான் இல்லை. நான் உனக்கு என்னிடத்திலே இருக்கின்ற அறிவுகளில் மூன்று அறிவை சொல்லித்தருகிறேன். எனக்கு ஒரு சிறிய குவளையில் சர்பத் தருவாயா? என்று கேட்டார்கள். கடைக்காரன் முஹம்மது (ரஹ்) அவர்களை பணம் இல்லையென்றால் தரமுடியாது என்று சொல்லித் துரத்திவிட்டான்.அதனால் பெரும் வேதனை அடைந்தவர்களாக முஹம்மது (ரஹ்) அவர்கள் சென்றார்கள். 


ஒரு நாள் இந்த சர்பத் கடைகாரனுக்கு அல்லாஹ் பெரிய சோதனை ஒன்றை ஏற்படுத்துகிறான். அவன் தன்னுடைய மனைவிக்கு உலகிலுள்ள சகல வகையான நகைகளையும் நான் அணிவிப்பேன், தவரினால். அவள் தலாக்காகிவிடுவாள் என்று ஒரு நேர்ச்சை செய்திருந்தான். காலம் விரைந்தோடியது நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டிய அவசியம்  அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. இவனால் உலகிலுள்ள அனைத்து வகையான நகைகளையும் அணிவிக்க முடியுமா? அது அசாத்தியமானது. நகை போடாவிட்டால் தலாக்காகிவிடுவாள். இக்கட்டில் சிக்குண்டான் இவன். ஒரு ஆலிமிடத்திலே போய் கேட்டான் அவரால் அதற்கு தீர்ப்பு கூற முடியாமல் போனது இப்படி இப்படியாக அந்த ஊரிலுள்ள அனைத்து அறிஞர்களையும் சந்தித்துக் கேட்டான் யாருக்கும் விடை தெரியவில்லை. இறுதியில் ஒரு ஆலிம் சொன்னார்; இதற்கு விடை சொல்ல இந்த ஊரிலே முஹம்மத் என்ற ஒரு அறிஞர் இருக்கிறார் அவரால்தான் இதற்கு தீர்ப்பு சொல்லமுடியும் என்று. தேடி அலைந்தது அவர் சொன்ன அந்த அறிஞரிடம் போய் பார்கிறான். அங்கே இருப்பது தன்னிடம் மூன்று அறிவு சொல்லிக் கொடுக்கிறேன் சர்பத் கொடு என்று கேட்டாரே அவர்தான். அங்கே சென்று நடந்ததைக் கூறி மனிப்புக் கேட்டு தன் நிலைமையை விளக்கினான். அன்று நீங்கள் மூன்று அறிவு சொல்வதாக சொன்னீர்கள் பண ஆசையினால் உதாசீனம் செய்துவிட்டேன். ஆனால் இன்று என் இக்கட்டான சூழலுக்காய் ஒரு அறிவைச் சொல்லித்தாருங்கள் என்று கெஞ்சினான். அப்போது சொல்கிறார்கள் முஹம்மது (ரழி) அவர்கள் பார்த்தாயா. நீ கேட்கும் இவ்வறிவோடு மேலும் இரண்டு அறிவுகளை சொல்லவே அன்று நான் உன்னிடம் கேட்டேன் ஆனால் நீயுமோ என்னைத் துரத்திவிட்டாய். இருந்தாலும் உனக்கு நான் சொல்லித்தருகிறேன். நீ அவளுக்கு  நகை ஒன்று கூட அணிவிக்க வேண்டியதில்லை. மாறாக சிறிய அளவில் ஒரு குர்ஆனை எடுத்து அவள் கழுத்திலே மாலையாய் அணிவித்துவிடு உன் நேர்ச்சை நிறைவேறும் உன் மனைவி தலாக்காக மாட்டாள் என்று கூறினார்கள். அப்போது அவன் அது எப்படி நாயகமே சாத்தியமாகும் என்று கேட்டான். அதற்கு ولا رطب ولا يايس الا في كتاب مبين "பச்சையான ஒன்றாயினும் காய்ந்த ஒன்றாயினும் பட்டவர்த்தனமான திருக்குர்ஆனிலே அது இருக்கிறது" என்ற திருக் குர்ஆன் வசனத்தை ஆதாரமாக காட்டினார்கள் முஹம்மத் (ரஹ்) அவர்கள். ஆகவே இதிலிருந்து அறிவின் பெறுமதியை உங்களால் உணர முடியும்.


உலகிலுள்ள விலை மதிக்கத்தக்க எத்தனையோ விடயங்களை தேடுவதிலேயே அதிக ஆர்வம் காட்டிவரும் நாம், இந்த விலை மதிப்பற்ற இரண்டு விடயங்களையும் தேடுவதிலே அதிக ஆர்வம் காட்டவேண்டும். அறிவென்று நோக்கினால் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃறிபத் என்ற அறிவுகளை அறிந்து; அதன் மூலம் நேர்வழி என்ற ஹிதாயத்தை பெற்று மனிதனாகவேண்டும். அந்த ஹிதாயத்திலே செவ்வனே நடந்து செல்லவேண்டும்.


ஒருவனிடம் பெரும் செல்வம் இருக்கும் ஆனால் மார்க்க அறிவு சற்றேனும் இல்லாத மடையனாக அவன் இருப்பான். ஆனால் உலகம் அவனை மரியாதையுடனே நோக்கும், அவனுக்கு மதிப்பளித்தே நடக்கும். இன்னொருவன் இருப்பான் பணமோ செல்வமோ இல்லாத வறியவனாயிருப்பான் ஆனால் அவனிடம் மார்க்க ஞானம் நிரப்பமாயிருக்கும். அவனை உலகம் கண்டுகொள்ளவே மாட்டாது.  இவ்விருவரில் மதிப்புள்ளவர் யாரென்றால் யாரிடம் அறிவும் ஹிதாயத்தும் இருக்கிறதோ அவரையே அல்லாஹ் மதிக்கிறான். அவன் உலக செல்வங்களை நோக்குவதில்லை. 


நாம் அனைவரும் சூரத்துல் பாதிஹா ஓதுகிறோம் அது தொடர்பாக சில விளக்கங்களை சொல்லவே மேலே இந்த விடயங்களை சொல்லிவந்தேன்.

اياك نعبد واياك  نستعين உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம். இந்த வசனம் نعبدك ونستعينك இவ்வாறு வந்திருக்கலாம். ஆனால் இந்த வசனமோ அல்குர்ஆனிலே சுத்தி வளைத்து மூக்கைத்தொடும் கதைபோல வந்திருக்கிறது. அல்லாஹ் வீணாக எதையும் செய்யமாட்டன் சொல்லமாட்டன். அவ்வாறு சொல்லிருக்கிறான் என்றால் அதிலே ஒரு விடயம்; விளக்கம் இருக்கிறது அதைப் புரியவேண்டும்.


இதிலே உள்ள இந்த  ك என்ற ஒரு எழுத்து இருக்கிறது அந்த எழுத்தை முன்னாள் கொண்டு வருவதாக இருந்தால் அதை மட்டும் கொண்டுவர முடியாது. மாறாக ايّاك என்று ايّا உடன் சேர்த்தே சொல்ல வேண்டும் என்பது அரபு இலக்கணச் சட்டமாகும்.


அல்லாஹ் இந்த வசனத்தை, விடயத்தை உறுதிப்படுத்துவதற்காகவே இவ்வாறு சொன்னான். இதிலுள்ள பிரயோசனம் என்னவென்றால். نعبدك என்று  சொன்னால் "உன்னை   வணங்குகிறோம்' என்று வரும். ஆனால் اياك نعبد
என்றால் உன்னையே வணங்குகிறோம் என்று வரும். முதலாவது சொன்ன வசனப்படி உன்னை வணங்குகிறோம் என்று சொன்னால்; உன்னையும் வணங்குகின்றோம் இன்னொன்றையும் வணங்குகின்றோம் என்ற ஒன்று அங்கு வருவதற்கு சாத்தியம் ஒன்று இருக்கிறது. ஆனால் "உன்னையே வணங்குகிறோம்" என்று சொல்லும்போது எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமின்றி உறுதியாக தெளிவாக கூறப்பட்டுவிடுகிறது. இந்த பேச்சைப் பலப்படுத்தவே அல்லாஹ் இவ்வாறு சொல்லியிருக்கிறான். 


அடுத்தது واياك نستعين  . இதைக்கூட نستعينك  "உன்னிடம் உதவி தேடுகிறோம்" என்று சொல்லி இருக்கலாம். அவ்வாறு சொல்லும் போது உன்னிடமும் தேடுகிறோம் இன்னொருவரிடமும் உதவி தேடுகிறோம் என்ற ஒன்று அங்கே வருவதற்கு சத்தியம் இருக்கிறது. இந்த பேச்சை வலுப்படுத்தவே அல்லாஹ் واياك  نستعين என்று கூறி இருக்கிறான். இந்த இரண்டு இடத்திலும் உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று வரும் இந்த உறுதிப்படுத்தலை தருவது மேலே வசனத்தில் உண்டான ايا என்ற சொல்லே ஆகும்.


ஆகக்குறைந்தது நாம் ஐந்து நேரம் தொழுகிறோம் சுன்னத்தான  தொழுகை அதிகம் தொழுபவர்களும் எத்தனையோ பேர் இருப்பார்கள். இவ்வாறு நாம் தொழும் ஒவ்வொரு தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் மேற்கண்ட வசனத்தை ஓதியே ஆகவேண்டும்.


நாம் தொழுகையில் அல்லாஹ்விடமே உரையாடுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படிஎன்றால் நாம் அல்லாஹ்விடம்  உன்னையே வணங்குகிறோம் என்று வாக்களிக்கிறோம். வாக்களித்துவிட்டு வெளியே வந்து அந்த வாக்கை மீறுகின்றோமா? இல்லையே! யாரையேனும் வணங்குகின்றோமா? அவ்வாறு யாரையும் வணங்குவதில்லை.


அடுத்தது என்ன சொல்கிறோம்
? واياك  نستعين "இறைவனே உன்னிடமே உதவிதேடுகிறோம்" வேறு யாரிடமும் கிடையாது என்று தொழுகையில் பள்ளிவாயலில் வைத்து வாக்களித்துவிட்டு. வீடு சென்று தன் மனைவியை அழைத்து உணவு தா! என்றும் வேறு எதையோ எடுத்துக்கொடு என்றும் நாம் கேட்பதன் மூலம் எமது மனைவியிடம் உதவி தேடிவிடுகின்றோம். அல்லாஹ்வுக்களித்த வாக்கிலிருந்து மாறுபட்டுவிடுகின்றோம்.


இச்சமயம் அல்லாஹ்விடம் உதவி தேடப்படுகிறதா? அல்லது மனைவியிடம் வேறு சிருஷ்டிகளிடம் உதவி தேடப்படுகிறதா? சிருஷ்டிகளிடமே உதவி தேடப்படுகிறது. அல்லாஹ்வுக்கு அளிக்கப்பட்ட வாக்கின் நிலை என்ன? கொடுக்கப்பட்ட வாக்கின் பிரகாரம் எது வேண்டுமென்றாலும் அல்லாஹ்விடமே கேட்கவேண்டும். ஆனால் அது இங்கு நடக்கவில்லை.


உங்களால் சொல்லமுடியுமா இந்த உலகில் அல்லாஹ்விடம் மாத்திரம் உதவி தேடி வேறு யாரிடமும் உதவி கேட்காமல் வாழமுடியும் என்று. சொல்ல முடியவே முடியாது.


நாங்கள் வாக்களித்தபடி இன்றி இவ்வாறு வாழ்வது. வாக்கு மீறுதலா இல்லையா? இதற்கு பாவம் கிடைக்குமா இல்லையா? நிச்சயம் கிடைக்கும். அப்படிஎன்றால் அதிலிருந்து தப்புவதற்கு வழி இல்லையா? என்றால் வழி உண்டு. என்ன வழி நாம் யாரிடம் உதவி தேடினாலும் அல்லாஹ்விடமே உதவி தேடுவதாய் என்னவேண்டும். இது மாத்திரமே பாவம் ஏற்படாது போக ஒரே வழி. இல்லையென்றால் சூரத்துல் பாத்திஹா ஓதும் அனைவரும் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்களாகவும், பாவிகளாகவும் ஆகவேண்டியே வரும் என்பதில் சந்தேகம் கிடையாது.


اذا اخذت اخذت من الله اذا اعطيت اعطيت الله நீ கொடுத்தால் அல்லாஹ்வுக்குக் கொடு நீ எடுத்தால் அல்லாஹ்விடமிருந்து
எடு. الاولياء كانو يأخذون من الله ويعطون الله அவ்லியாக்கள் என்பவர்கள் அல்லாஹ்விடமிருந்து எடுக்கிறார்கள், அல்லாஹ்வுக்குக் கொடுக்கிறார்கள்.


ஆகவே நாம் எதை எடுத்தாலும் அல்லாஹ்விடமிருந்து எடுப்பதாகவும் எதைக் கொடுத்தாலும் அல்லாஹ்வுக்குக் கொடுப்பதாகவுமே எண்ண வேண்டும் இல்லையென்றால் நாம் அல்லாஹ்வுக்களித்த வாக்கிற்கு மாறு செய்தவர்களாக ஆகிவிடுவோம். இவ்வாறு எண்ணுவது பிழையாகிவிடாதா என்றால் கிடையாது. ஏனெனில் அவனல்லாத ஒன்றுமில்லை என்பதுதானே தௌஹீத், ஈமான்.


எங்களுக்கு பலதாக மனைவியாக பிள்ளையாக தாயாக தந்தையாக மரமாக தெரிகிறதே அதெல்லாம் என்ன? அது எமது பேதைமை, மடமை, அறியாமை. நாம் பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்தால்தான் பொருள் எதுவென்று தெளிவாகத்தெரியும். மற்றவரின் கண்ணாடியை அணிந்து பார்த்தல் சாரைக் கண்போல பொருள் இரண்டாகவே தெரியும்.


சில ஹதீதுகள் இப்படியும் வருகின்றன.
إذا سألت فاسأل الله واذا استعنت فاستعن بالله நீ எதையாவது கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேட்டுக்கொள். நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டே உதவிதேடு. இந்த ஹதீதை வழிகெட்டவர்கள் புரியாமல் அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி கேட்கக் கூடாது என்பதற்கு ஆதாரமாக எடுத்துப் பேசுகிறார்கள். இது ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தன்னிடம் கேள்வி கேட்டு வருபவர்களின் ஆன்மீக நிலையைப் பொறுத்து சொல்லும் பதில்கள். 


உங்களுக்குத்
தெரிந்திருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து  
اي العمل افضل "அமல்களில் சிறந்தது எது" என்று கேட்கிறார். அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள்
الصلاة اول وقتها "தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது" என்று பதிலளித்தார்கள். இன்னொருவர் வந்து اي العمل افضل என்ற அதே கேள்வியை கேட்டார். அதற்கு அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் بر الوالدين "பெற்றோருக்கு நன்றி உள்ளவனாய் இருப்பது" என்று சொன்னார்கள். இன்னொருவர் வந்து اي العمل افضل என்ற அதே கேள்வியை கேட்டார். அதற்கு அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் الجهاد في سبيل الله "அல்லாஹ்வுடைய பாதையில் யுத்தம் செய்வது" என்று சொன்னார்கள். ஒரே கேள்விதான் மூன்று விதமான பதில் அளிக்கப்பட்டது. வந்தவர்களின் மனநிலை அறிந்துதான் பதில் சொன்னார்கள் நபி பெருமான் (ஸல்) அவர்கள். மூவரது நடத்தையையும் அவர்களில் இருந்த குறையை அறிந்து உணர்ந்த நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களுக்கேற்ற மருந்தைக் கொடுத்தனுப்பினார்கள்.


ஆரம்பத்தில் கூறப்பட்ட அந்த ஹதீது சொல்லப்பட்டவர் அல்லாஹ்வை மிக நெருங்கிய நிலையில் இருந்தார். அவர் அவனல்லாத யாரிடமும் கேட்கமுடியாது அதனால்தான் அவ்வாறு பதிலளித்தார்களே ஒழிய. இது பொதுவாக மற்றவர்கள் யாரிடமும் கேட்கக் கூடாது என்பதற்காக சொல்லப்பட்டதல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். 

நம்ரூத் இப்றாஹீம் நபியை நெருப்பிலே இட்ட சமயம்; ஜிப்ரயீல் (அலை) வந்து உமக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டபோது, நபி இப்றாஹீம் (அலை)
اما اليك فلا "இந்த கட்டத்தில் உன்னிடம் எதுவும் தேவை இல்லை" என்று சொன்னார்கள். குர்பிய்யத் உடைய (அல்லாஹ்வை மிக நெருங்கிய) நிலையிலே  இருந்த காரணத்தினால் அவனல்லாத யாரிடமும் கேட்க முடியாது அதனால்தான் இப்றாஹீம் நபி (அலை) அவ்வாறு சொன்னார்கள்.  


ஆகவே இவை அனைத்திலும் நிலை அறிந்து பதில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளமுடியும். 

எனவேதான் சூரத்துல் பாத்திஹாவின் படி நாம் யாரிடம் உதவி கேட்டாலும் அவரையும் அல்லாஹ்வுடைய வெளிப்பாடு, அவனேதான் இவனாக வந்துள்ளான் என்ற உணர்வோடு கேட்டோமானால் பாவமாக ஆகாது. இல்லாமல் சிருஷ்டி இடத்திலே உதவி தேடுவதாய் எண்ணி இவன் உதவி தேடினால் அது பாவமாக வாக்கிற்கு மாறாக அமைந்துவிடும். அல்லாஹ் குற்றம்பிடிப்பான். 


சிலர் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் வலீமார்களிடம் கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டு ஏனைய அடியார்களிடம் உதவி கேட்டே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் . ஆகவே அறியாமையை களைந்து மார்கத்தில் தெளிவு பெறுவோமாக.
Categories: ,