நபி மொழிகளும் போதனைகளும்.

Posted by islamiyailakku on 12:20 AM
கண்மணி நாயகம்  (ஸல்-அம் ) அவர்கள் கூறினார்கள்:

 மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். அந்த நன்மையை அவன் செய்து முடித்தால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணினான்; ஆனால், அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு குற்றமாகப் பதிவு செய்வதில்லை. அவன் அந்தத் தீமையைச் செய்து முடித்துவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே நான் பதிவு செய்வேன்.

 அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
 நூல்: முஸ்லிம்.

*****======*****
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று" என நபி (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி

*****======*****
 உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்.
 அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  அவர்கள்.
 நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.

*****======*****
இறைத்தூதர்(ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'.


அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்.
ஆதாரம்: புகாரி.


*****======*****

நான், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்-அம்) அவர்கள் , ‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்’ என்று பதிலளித்தார்கள்.

 அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அவர்கள். 
 ஆதாரம்: புகாரி.

*****======*****

“நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று கண்மணி நாயகம் (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று கூறினார்கள்.

மக்கள், ‘பாதையின் உரிமை என்ன? என்று கேட்டார்கள். நபி(ஸல்-அம்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள்.
ஆதாரம்: புகாரி.

*****======*****

நபி (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள் "ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்"

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: முஸ்லிம்


*****======*****
'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?' என்று நாங்கள் நபி (ஸல்-அம்) அவர்களை வினவினோம். அதற்கு 'ஆம்' என்றனர். 'கஞ்சனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு நபி (ஸல்-அம்) அவர்கள் 'ஆம்' என்று பதிலளித்தனர். 'பொய்யனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் (ரலி) அவர்கள்.
ஆதாரம்: முஅத்தா.


*****======*****

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்-அம்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி) அவர்கள்.
ஆதாரம்: அபூதாவூத்.  

*****======*****

ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்" என்று ரசூலே கரீம் (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்.

(இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்-அம்) அவர்கள், '(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்.
ஆதாரம்: புஹாரி


Categories: