ஹஸ்ரத் உமர் பாறூக் ரழியல்லாஹுஅன்ஹு...

Posted by islamiyailakku on 4:10 AM


கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா (ஸல்-அம்) அவர்களின் தலையினைக் கொய்தே திரும்புவேன் (நஊது பில்லாஹி மின் ஜமாலிக்) என வாளோடு சூளுரைத்து கிளம்பியவர்கள்; அல்லாஹ்வின் வேத வசனங்களை கேட்டதும் நெஞ்சு படபடத்து, நாயகம் (ஸல்-அம்) அவர்களின் கண்களை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் நாணிக் குறுகி இஸ்லாத்தை ஏற்றவர்களும், நபித்துவம் என்னுடன் முற்றுப் பெறாதிருந்தால் உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) நபியாகத் தகுந்தவரே என நாயகம் (ஸல்-அம்) அவர்களால் புகழப்பட்ட அல் பாறூகுல் அஃலம் சய்யிதினா உமர் ரழியல்லாஹுஅன்ஹு அவர்களையே, ஹஸரத்  அபூ பக்கர் சித்தீக் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் தமது தோழர்களான சஹாபாப் பெருமக்களிடம் கலந்தாலோசித்து இரண்டாம் கலீபாவாக நியமனம் செய்தார்கள். அதனைத் தொடர்ந்து கலீபா உமர் பாறூக் ரழியல்லாஹுஅன்ஹு அவர்களின் கரங்களில் முஹாஜிர்களும் அன்சாரிகளும் சத்தியப்பிரமாணம் (பைஅத்) செய்தார்கள்.

இரண்டாம் கலீபாவின் முதல் உரை...

ஹிஜ்ரி 13ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் 23ம் நாள் கிலாபத் என்னும் பொறுப்பினை கலீபா ஏற்றுக் கொண்டார்கள். மஸ்ஜிதுன் நபவியின் முன் நின்ற மக்களை நோக்கி முஃமீன்களின் தலைவர், "மக்களே நானும் உங்களில் ஒருவனே!, கலீபா அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹுஅன்ஹு அவர்களின் கட்டளையை புறக்கனிக்க என் மனம் நாடி இருந்தால் நான் ஒருக்காலும் கிலாபாத் என்னும் பொறுப்பை ஏற்றிருக்கமாட்டேன்." என்று சற்று தாழ்ந்த குரலில் கூறியவராக தம் கைகளை உயர்த்தி "யா அல்லாஹ்! நான் வன்மை உடையவனாக இருக்கிறேன், நீ என்னை  மென்மைப் படுத்துவாயாக, நான் பலகீனமாக இருக்கிறேன், நீ என்னை வலிமைப்படுத்துவாயாக, தயக்கத்தை விட்டும் என் இதயத்தை அகலப் படுத்துவாயாக" என்று பணிவுடனும் அடக்கத்துடனும் இறைஞ்சிய விதம் மக்களின் உள்ளங்களில் பற்றியிருந்த கலீபாவினுடைய அச்சத்தையும் திடுக்கத்தையும் தணியச் செய்தது. 

ஒரு சிறு மவுனத்திற்குப் பிறகு உறுதியான குரலில் "மக்களே இது எனக்கும் உங்களுக்கும் ஒரு கடுமையான சோதனைக் காலம் ஆகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் முன் வரும் உங்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் நானே தீர்வு காணுவேன். என்னிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பினை நான் கை நழுவ விடமாட்டேன். நல்வழியை நாடுபவர்கள் என்னிடமிருந்து நன்மைகளையே காணப் பெறுவர். தவறான சிந்தனை படைத்தவர்களுக்கு - மற்றவர்களும் அறிந்து உணரும் வகையில், நான் சரியான பாடம் புகட்டுவேன். நீங்கள் என்னை உள்ளன்போடு ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். நானும் உங்களிடையே நெறி தவறாது ஊழியம் புரிவேன் என்று உறுதி கூறுகிறேன். சமுதாயத்தை நேர்வழியினில் செலுத்த வழிகாட்டி மீது கடமை ஆகிறது. கஃபாவின் இரட்சகன் அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்கிறேன் - நான் உங்களை நேரான வழியில் அழைத்துச் செல்வேன்."

வியர்வையால் தொப்பலாடிய 12 ஓட்டுக்கள் இடப்பட்ட ஓர் சட்டையை  அணிந்திருந்த கலீபா அவர்கள், தோலினால் ஆனா ஒரு சாட்டையை மட்டும் கையில் ஏந்தி உலா வந்த போது மனிதர்கள் மட்டுமல்ல , காற்றும், நெருப்பும், கடலும் , கரையும் அவர்களுக்கு பணிந்து நின்றன. எனவே வரலாற்று ஆசிரியர்கள் நீதி என்றால் மறுபெயர் கலீபா உமர் பாறூக் ரழியல்லாஹு  அன்ஹு என்று கூறுகின்றனர். 

நல்ல நிருவாகம்...

கலீபா அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய ஆட்சி 22 லட்சத்து 51 ஆயிரத்து 30 சதுர மைல்கள் பரவியது. இஸ்லாத்திகு தொல்லை கொடுத்து வந்த பாரசீகர்களும், ரோமானியர்களும் அடக்கப்பட்டனர். சமுதாயப் பணிகளுக்கு தேவையான "பைத்துல் மால்" என்னும் பொதுக் கருவூல சொத்து நிறுவப்பட்டு ஏழை, எளியவர் நலனுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பணிக்கும் பயன்படுத்தப்பட்டது. நீதி மன்றங்களும் நீதிபதிகளும் அமைக்கப்பட்டு பிரச்சினைகள் அதன் மூலம் தீர்க்கப்பட்டது. இராணுவத் தலைமையிடம் அமைக்கப்பட்டு  நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. சாலைகளும் வாய்க்கால்களும் அமைக்கப்பட்டது. மதரசாக்கள் நிறுவப்பட்டு, சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்க்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. காவல் நிலையங்களும் சிறைச்சாலைகளும் அமைக்கப்பட்டு  தவறு செய்பவர்களுக்கு சரியான தண்டனையும் கொடுக்கப்பட்டது. "ஹிஜ்ரி" என்னும் இஸ்லாமிய ஆண்டு கணக்கிடும் முறை மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, எடைக்கற்கள் அறிமுகப்படுத்தப்பட்டு  எடை நிர்ணயம் மற்றும் அளவு சோதனை செய்யப்பட்டது. ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு நிலையங்கள் அமைத்தல் போன்ற சமுதாயப் பணிகள் மேட்கொள்ளப்பட்டு மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டது.

கராமத் அற்புதங்கள்...

ஆன்மீக ஞானத்தால் திளைத்திருந்த கலீபா அவர்கள் வறண்டு போன நைல் நதிக்கு கடிதம் எழுதி, அதை வற்றாத ஜீவ நதியாக மாற்றினார்கள். தம்முடைய போர்வையால் எரிமலையின் கக்கும் சீற்றத்தை கட்டுப்படுத்தினார்கள். தம்முடைய மறைவான ஞானத்தால், தம்மை காண வந்த குழுவினரிடத்தில் "உஷ்த்தர்" என்பவனை பார்த்து அலாஹ் இவனை அழிப்பானாக இவனின் தீமையை விட்டும், குழப்பத்தை விட்டும் இச்சமுதாயத்தை காப்பானாக என இறைஞ்சினார்கள். (20 ஆண்டுகளுக்குப் பிறகு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கொலை செய்த துரோகிகளில் இவனும் ஒருவன் என பின்னாளில் தெரிய வந்தது) ஒரு முறை சிரியாவின் மீது போர் தொடுக்கப் படை திரட்டுகையில் ஒரு குழு வந்தது, அக்குழு வந்தவுடன் கலீபா அவர்கள் வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு, படையில் சேர்த்துக் கொள்ளவும் மறுத்துவிட்டார்கள். (20 ஆண்டுகளுக்குப் பிறகு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தாக்கிய அஸ்வத்  தபீபீ என்பவனும், 24 ஆண்டுகளுக்குப் பிறகு  ஹஸ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ அவர்களை கொலை செய்த  ரஹ்மான் இப்னு முல்ஜிம் முராதீ என்பவனும் அக்குழுவில் இருந்ததை மக்கள் பின்னாலிலேயே உணர்ந்தார்கள்) 

புனித மதீனா வீதியில் கலீபா நடந்து செல்கையில் "பரோஸ்" என்னும் பாரசீகன் கலீபாவிடம் முறையிட்டுத் திரும்பிச் செல்கையில், அவனை சிறிது நேரம் கவனித்த கலீபா அவர்கள், "அவன் பேச்சில் மிரட்டல் தெரிகிறது என ஹஸ்ரத்  அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தெரிவித்தார்கள். 

மறுநாள் காலை பஜ்ரு தொழுகையின் போது பரோஸ், கலீபா அவர்களை, பின் பக்கம் இருந்து 6 முறை குறுவாளால் குத்திவிட்டு, தப்பிக்க வழி இன்றி தன்னையும் மாய்த்துக் கொண்டான். நஸ்ரானியான ஜபினாவும் பாரசீகனான ஹர்மூசானும்  கொலைத்திட்டத்துக்கு உதவியவர்கள் என்பது பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஹர்மூசான் என்பவன் இஸ்லாத்தை ஏற்பது போல் நடித்து நயவஞ்சகம்  செய்தவன்  (வஹ்ஹாபி) ஆவான்.

63 வயதை எட்டி இருந்த கலீபா அவர்கள், ஹிஜ்ரி 23ம் ஆண்டு துல் ஹஜ் மாதம் கடைசி நாள் (குறுவாளால் தாக்கப்பட்ட நாளிலிருந்து 3வது நாள்) வலியின் கொடுமையை தாங்கிக் கொண்டு என்றும் இறப்பில்லாத வாழ்க்கைக்கு, நுழைவிடமான இறப்பு என்ற போர்வையைக் கொண்டு உலக வாழ்க்கையிலிருந்து மறைந்து வாழ (ஷஹீதானார்கள்) ஆரம்பித்தார்கள். ஹஸ்ரத் அவர்களின் புனிதமிகு மஜார் ஷரீப் முதல் கலீபாவின் அருகிலேயே உள்ளது. 2ம் கலீபாவின் மொத்த ஆட்சிக் காலம் 10 வருடங்கள் 6 மாதங்கள் 4 நாட்கள் ஆகும். 
(((இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)))

அடிமை சாசனமும் ரவுளா சாட்சியும்...

ஒரு முறை இள வயதினராக இருந்த இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் 2ம் கலீபாவின் மகனான அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம், "உன் தந்தை என் பாட்டனாரின் அடிமைதானே"! என்று கூறியதை தம் தந்தையிடம் கூறி முறையிட்டுக் கொண்டார்கள் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். இதை விசாரிப்பதற்காக தம் மகனுடன் சென்ற இரண்டாம் கலீபா, இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கண்டதும் "தன் மகனிடம் கூறியதை திரும்பக் கூறுங்கள்" என வினவியதும், "நீங்கள் என் பாட்டனாரின் அடிமைதானே!" என பதிலளித்ததும், ஆனந்தக் கண்ணீருடன் இமாமை கட்டித்தழுவி, அவர்களை கையில் பிடித்துக் கொண்டு நேராக சல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் புனித ரவுளா முபாறக்கிற்கு சென்ற 2ம்  கலீபா அவர்கள் "யாரசூலல்லாஹ்! சல்லாஹு அலைஹிவசல்லம் என்னுடைய தாய் தந்தை உங்களுக்கு அர்ப்பணம்! இதோ உங்கள் பேரனார் - இமாம் ஹுசைன்  ரழியல்லாஹு அன்ஹு எங்களை, உங்களின் அடிமை என்று சாட்சியம் கூறுகிறார்கள்", எனக் கூறி அதை அப்படியே எழுதச்செய்து இமாமவர்களின் கை எழுத்தையும் இடச்செய்து - அதை பத்திரப்படுத்திக் கொண்டார்கள். கலீபா அவர்கள் மரணிக்கும் வேளையில், இந்த சாட்சிப் பத்திரத்தை தன் தலையின் அடியில் வைத்துவிடவும் கூறினார்கள். இதனால் உமரின் ( ரழியல்லாஹு அன்ஹு) முழுச் சந்ததியினருக்கும் மறுமைப்பலன் உண்டாகும் என கூறி அகமகிழ்ந்தார்கள்.  

(((ஸுப்ஹானல்லாஹ்)))
ஒரு மாவீரரின் வரலாறு என்னும் நூலிலிருந்து மக்கள் பயன் பெரும் வகையில் வெலியிடப்படுகிறது.
நூலாசிரியருக்கு நன்றிகள்.

Categories: