முதல் கலீபாவின் முதல் உரை.

Posted by islamiyailakku on 11:59 PM
"ஓ, மக்களே! நான் உங்களின் தலைவனாக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், இருப்பினும் உங்களைக்காட்டிலும் நான் சிறந்தவனல்ல. (உத்தமர் அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்படி சொல்வதன் மூலம் அவர்களது பணிவை உணர முடிகிறது) நான் எதாவது தவறுகள் செய்தால் என்னை திருத்துங்கள், கவனியுங்கள்! உண்மையானது நேர்மையையும்; பொய்யானது அநீதியையும் கொடுக்க வல்லது. உங்களில் எளியவர் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி அகற்றப்படும் வரை என்னிடம் வலியவராகவே இருப்பார்கள். உங்களில் வலியவர்கள் அநீதி இழைக்கையில் என்னிடம் எளியவராகவே இருப்பார்கள்!

கவனமாகக் கேளுங்கள், எவரொருவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதிலிருந்து (நப்ஸ் என்னும் இச்சைப் போராட்டத்திலிருந்து) பின்னடைகிறாரோ அவரை அல்லாஹ் இழிவுபடுத்துவான். எந்தச் சமூகத்தில் தீமைகள் மலிகின்றனவோ அதன் மீது அல்லாஹ் சோதனைகளை இறக்குவான்.

நீங்கள் எனக்குக் கட்டுப்படுங்கள் அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  நான் கட்டுப்படும் வரை, நான் கட்டுப் படாவிட்டால் நீங்களும் எனக்கு கட்டுப்படுவதிலிருந்து விளக்கு அழிக்கப்படுவீர்கள்!"

புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சகாத் கொடுக்க மறுப்பு தெரவித்த போது, கலீபா அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒரு ஒற்றை நூலின் அளவு சகாத் கொடுக்க வேண்டியவன் அதை உரியவர்களிடம் கொடுத்து விடட்டும், அவர் அதை அப்படி கொடுக்க மறுத்தால், அவருக்கெதிராக நான் போர் தொடுப்பேன் எனக்கூறி மக்களை நல்வழிப் படுத்தினார்கள். 

நயவஞ்சகம் மிகுந்த யஹூதிகள், நஸ்ரானிகள் மக்களிடையே குழப்பம் விளைவித்த சமயத்திலும், முஸைலமா, அஸ்வத் அன்ஸி, துலைஹா போன்ற பொய்யர்கள் தங்களை நபி என்று கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய சமயத்திலும் கலீபா அவர்கள் துரித நடவடிக்கை எடுத்து மக்களைக் காப்பாற்றினார்கள். கலீபா அவர்களின் முயற்சியால், இஸ்லாமியர்களுக்கு எதிரான தொல்லைகள் கொடுத்து வந்த ஈரானியர்கள் மற்றும் ரோமானியர்கள் அடக்கப்பட்டார்கள். 24,000 பேரைக் கொண்ட இஸ்லாமியப்படை 1,50,000 நபரைக் கொண்ட ரோமனியப்படையினை எதிர்த்து வெற்றிபெற்றது, கலீபா அவர்களின் ஆன்மீக ஞானம் தம் படைவீரர்களுக்கு பாய்ச்சப்பட்டு வீர உரமூட்டியதே காரணமே ஆகும்.

"தக்வா" என்னும் இறையச்சத்தை தம் உள்ளத்தில் சுமந்த கலீபா அவர்கள், சாதாரண ஆடைகளை உடுத்தியவர்களாய், எளிய உணவுகளை உண்டவர்களாய், பகல் வேளைகளில் நோன்பு நோற்பவர்களாய், இரவு முழுவதும் இறை வணக்கத்தில் கழித்தவர்களாய், மாளிகைகள் இல்லாமல் தன்னை சூழ படை வீரர்கள் இல்லாமல், தன்னந்தனியே மதீனத்துத் தெருவிலே வறியவர்களுக்கு உதவியவர்களாய் தம்முடைய காலத்தை நடத்தியவர்கள், தம்முடைய 63 வயதில் ஹிஜ்ரி 13ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் 21ம் நாள் (22 Aug 634) உலகின் அன்றாட வாழ்கையில் இருந்து மறைந்து மறுமை வாழ்வை வாழ ஆரம்பித்தார்கள். கலீபா அவர்களது ஆட்சிக்காலம் 2 ஆண்டுகளும் 3 மாதங்களும் ஆகும்.


கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் ரவுலாவில் இருந்து அழைப்பு... 


கலீபா அவர்களின் புனித உடல் அவர்களது இறுதி உரையின் படி, அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ அவர்களின் திருக்கரங்களால் நீராட்டப்பட்டு கபனிடப்பட்டது. உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களினால் தொழுகை நடாத்தப்பட்டு, நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புனித ரவுலா ஷரீபின் வாசல் முன் வைத்துக் கொண்டு நின்று "அஸ்ஸலாமு அலைக்கும் யாரசூலல்லாஹ் ஹாதா அபூபக்கர்" என்று கூறிய போதே இடையிலிருந்து "உத்குலுல் ஹபீப இலல் ஹபீப்" நேசரை நேசரின் பக்கம் வரவிடுங்கள் என்ற புனித குரலின் அழைப்பினை அனைவரும் செவியுற்று புனித நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புனித நெஞ்சுக்கு நேராக கலீபா அவர்களின் புண்ணியத்திருமுகம் இருக்கும் படி நல் அடக்கம்செய்யப்பட்டது. 

கவி புனையும் திறன் பெற்றிருந்த கலீபா அவர்கள், ஒரு முறை விளையாடிக் கொண்டிருந்த இமாம் ஹுசைன்   ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தம் கைகளில் தூக்கிக் கொண்டு "என் தாய் தந்தை தங்களுக்கு அர்ப்பணம்! சாயலில் நீங்கள் ஈருலகின் நாயகர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் போலல்லவா இருக்கின்றீர்கள்? அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ வைப் போல் ஒத்ததில்லையே! என்ற பொருள்படக் கூறிய கவிதையை  அருகிலிருந்த ஹஜ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ அவர்களும் ரசித்து மகிழ்ந்தார்கள்.


Categories: