காரூண்ய நபீ நாதரின் உலக வாழ்வின் இறுதி நிமிடங்கள்...
Posted by islamiyailakku on 7:00 AM
இறுதி நேரம் நெருங்கவே
ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவதாவது:
“நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும்
நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது
எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி
(ஸல்) அவர்களை எனது மடியில் சாய்ந்திருந்தார்கள். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள்.
அவர்கள் மிஸ்வாக் செய்ய
விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். “நான் உங்களுக்கு அதனை
வாங்கித் தரவா?” என்று கேட்டபோது,
“ஆம்!” என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது
அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. “நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?” என்று கேட்டேன். தலை அசைத்து “ஆம்!” என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.”
இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: “நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில்
நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். “லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்-
அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை.
மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)
பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை
முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள்
அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) அவர்கள் செவிதாழ்த்திக் கேட்டார்கள்.
நபி (ஸல்) அப்போது “இறைத்தூதர்கள்,
வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்...
அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன்
என்னைச் சேர்த்து வைப்பாயாக!
அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி)
கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய
அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம்
சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.
ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல்
பிறை 12, திங்கட்கிழமை
முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63
வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.
கவலையில் நபித்தோழர்கள்
நபி (ஸல்) அவர்களின் மறைவுச் செய்தி எங்கும் பரவியது. மதீனா இருண்டுபோனது.
இதைப் பற்றி “நபி (ஸல்) எங்களிடம் வந்த
தினத்தை விட மிக அழகிய, ஒளிமிகுந்த நாளை
நான் கண்டதில்லை. நபி (ஸல்) மறைந்த தினத்தைவிட
இருண்ட, வெறுப்பான நாளை
நான் கண்டதில்லை” என அனஸ் (ரழி) அவர்கள்
கூறுகிறார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)
ஃபாத்திமா (ரழி) அவர்கள் “எனது தந்தையே! அழைத்த
இறைவனுக்கு பதில் அளித்துவிட்டீர்களே! எனது தந்தையே! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தங்களின்
தங்குமிடமாயிற்றே! எனது தந்தையே! உங்களின் மரணச் செய்தியை நாங்கள் ஜிப்ரயீலிடம் கூற வேண்டுமே” எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
உமரின் நிலை
உமர் (ரழி) எழுந்து நின்று “சில நயவஞ்சகர்கள் நபி
(ஸல்) இறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை
மூஸா இப்னு இம்ரான் (அலை) அல்லாஹ்வைச் சந்திக்கச் சென்று நாற்பது நாட்கள் தனது சமூகத்தாரை விட்டு மறைந்து இருந்த
போது மக்கள் மூஸா மரணித்து விட்டார் என எண்ணினார்கள். ஆனால், மூஸா (அலை) திரும்பி வந்தார்கள். அவ்வாறே
நபியவர்களும் தன் இறைவனைச்
சந்திக்கச் சென்றுள்ளார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) நிச்சயம் திரும்ப
வருவார்கள். தான் மரணித்து விட்டதாகக் கூறியவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுவார்கள்?” எனக் கூறினார்கள். [இப்னு
ஹிஷாம்(ரழி)]
அபூபக்ர் (ரழி) அவர்களின் நிலை
அபூபக்ர் (ரழி) இந்நேரத்தில் மஸ்ஜிது நபவியிலிருந்து சற்று தொலைவிலுள்ள ‘சுன்ஹ்’ என்ற இடத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தத்
துக்கமானச் செய்தியைக் கேட்டவுடன் தனது குதிரையில் ஏறி மஸ்ஜிது நபவிக்கு வந்து,
யாரிடமும் பேசாமல் நபி
(ஸல்) அவர்களைக் காண்பதற்காக
ஆயிஷாவின் அறை நோக்கி நடந்தார்கள். நபி (ஸல்) ஹிபரா நாட்டு ஆடையால் போர்த்தப்பட்டிருந்தார்கள். நபி (ஸல்)
அவர்களின் முகத்திலிருந்து
போர்வையை அகற்றி முகத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழலானார்கள். “என் தாயும் தந்தையும் தங்களுக்கு
அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணத்தைத் தரமாட்டான். அல்லாஹ்
உங்களுக்கு விதித்த முதல் மரணத்தையே நீங்கள் அடைந்து கொண்டீர்கள்” என்றும் கூறினார்கள்.
அடக்கம் செய்ய ஏற்பாடுகள்
நபி (ஸல்) அவர்களை அடக்கம் செய்வதற்கு முன்னதாக முஸ்லிம்களின் காரியங்களை
நிர்வகிக்கும் கலீஃபாவை நிர்ணயம்
செய்வதில் மக்கள் ஈடுபட்டனர். பனூ சாம்தாவின் வீட்டு வராண்டாவில் இது தொடர்பாக
நடந்த விவாதங்களுக்கும் கருத்து பரிமாற்றங்களுக்கும் பிறகு, முஹாஜிர்களும் அன்சாரிகளும் ஒரு மனதாக அபூபக் (ரழி) அவர்களை
கலீஃபாவாக நிர்ணயித்தனர்.
இந்த வேலையில் திங்கட்கிழமையின் பகல் முழுதும் முடிந்து இரவும் முழுமையாக முடிந்தது.
நபி(ஸல்)அவர்களை குளிப்பாட்டுதல்
அதுவரை நபி (ஸல்)
அவர்களின் புனித உடல் ஹிபரா போர்வையுடன் இருந்தது. நபி (ஸல்)
அவர்களின்
குடும்பத்தார்கள் அறையை மூடி வைத்திருந்தனர். செவ்வாய் பகல் அன்று நபி (ஸல்) அவர்களின் ஆடையைக் களையாமல்
அப்படியே குளிப்பாட்டினர். அப்பாஸ்(ரழி), ஃபழ்ல்(ரழி), குஸம் (ரழி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் உடலைப் புரட்ட,
உஸாமா (ரழி), ஷுக்ரான் (ரழி) இருவரும் நீர் ஊற்ற, அலீ (ரழி) அவர்கள் குளிப்பாட்டினார்கள். அவ்ஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை தனது நெஞ்சின் மீது
சாய்த்திருந்தார்கள். (இப்னு மாஜா) இவ்வாறே இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை
குளிப்பாட்டினார்கள். நபி (ஸல்) அவர்களைக்
குளிப்பாட்டுவதற்காக ஸஅதுப்னு கைஸமா (ரழி) அவர்களுக்குச் சொந்தமான "ஷகர்ஸ்" என்ற கிணற்றிலிருந்து நீர் கொண்டு
வரப்பட்டது. இந்நீரையே நபி
(ஸல்) வாழ்நாளில்
அருந்தி வந்தார்கள். (தபகாத் இப்னு ஸஅத்)
நபி (ஸல்) அவர்களை வெள்ளை நிற யமன் நாட்டு பருத்தி ஆடையினால் (கஃபன்)
போர்த்தினார்கள். அதில் தைக்கப்பட்ட
சட்டையோ தலைப்பாகையோ ஏதுமில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அடக்கம் செய்வது
நபி (ஸல்) அவர்களை எங்கு அடக்கம் செய்வது என்று கேள்வி எழுந்தது. அப்போது
அபூபக்ர் (ரழி) “இறைத்தூதர்களின் உயிர் எங்கு பிரிகிறதோ அங்குதான் அவர்கள்
அடக்கம் செய்யப்படுவார்கள்” என்று நபி (ஸல்)
கூற, நான் கேட்டிருக்கிறேன்
என்றார்கள். உடனடியாக நபி (ஸல்) மரணித்த இடத்திலுள்ள
விரிப்பை அகற்றி அங்கேயே அபூ தல்ஹா (ரழி) குழி தோண்டி அதில் பக்கவாட்டில் ஒரு குழி
அமைத்தார்கள். மக்கள் பத்து பத்து பேர் கொண்ட கூட்டம், கூட்டமாக நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் சென்று தனித்தனியாக
தொழுதார்கள்.
முதலில் நெருங்கிய குடும்பத்தார்களும், பின்பு முஹாஜிர்களும், அடுத்து அன்சாரிகளும், தொடர்ந்து சிறுவர்களும், பின்னர் பெண்களும் தொழுதனர். சிலர், “பெண்கள் முதலிலும் அடுத்து சிறுவர்களும் தொழுததாக அறிவிக்கின்றனர்.
(முவத்தா மாலிக், தபகாத் இப்னு ஸஅத்)
இதே நிலையில் செவ்வாயும் முழுமையாக கழிந்து புதன் இரவின் பெரும் பகுதி
கழிந்தது. இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:
“இரவின் நடுநிசியில் மண்வெட்டிகளின் சப்தத்தை வைத்தே நபி (ஸல்) அடக்கம்
செய்யப்பட்டதை அறிந்து கொண்டோம்.”
இரவின் கடைசிப் பகுதியில் நல்லடக்கம் நடைபெற்றதாகவும் ஓர் அறிவிப்பு உள்ளது.
(முஸ்னது அஹ்மது)
"கண்கள் குளமாகி உள்ளம் உருகும் இச்சரிதையை படிக்கும் போதே எம்மால்
தாங்க முடியவில்லையே நேரிலிருந்த
அவர்களின் குடும் அவர்கள் மேல் அளவில்லா பாசமும் நேசமும் கொண்ட உத்தம சகாபாக்கள் நிலையை சிந்தித்துப்
பாருங்கள்."