காமிலான ஷெய்கின் இலட்சணங்கள்.
Posted by islamiyailakku on 3:00 AM
- பெருமானார் (ஸல்) அவர்கள் வரை சென்றடைகின்ற ஸில்ஸிலாவை (ஞான குருமார் சங்கிலித் தொடரை)க் கொண்ட நல்ல ஒரு ஷெய்கிடம் ஞான தீட்சை பெற்று ஞானத்திலும் அறிவிலும் சாம்பூரணத் தன்மையிலும் மற்றவருக்கு அருள் பாலிக்கின்ற விசயத்திலும் நல்ல பக்குவம் அடைந்திருப்பதுடன் தான் தீட்சை வழங்குவதற்கு இஜாஸாவும் (அனுமதி) பெற்றிருப்பவராக இருப்பார்.
- மார்க்க சட்டக் கலையிலும் கொள்கை சித்தாந்தத்திலும் ஞானக் கலையிலும் ஆழ்ந்த அறிவு (இல்மு) உள்ளவராக இருப்பதுடன் அதன்படி அமல் செய்கின்றவராயும் இருப்பார். அவ்வாறு இல்லை எனின் மனிதர்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்கிக் கொள்வார்கள். (அந்த மடையர்களான தலைவர்கள்) தானும் வழி கெட்டு மற்றவர்களையும் வழிகெடுத்துவிடுவார்கள் என்ற பெருமானாரின் சொல்லுக்கு இலக்காக நேரிடும்.
- முரீதுகளின் மூலம் ஏதேனும் பொருட்களையோ பணம் காசுகலையோ கிஞ்சிற்றும் எதிர்பார்க்காமல் அல்லாஹ்வுக்காக கடமையாற்றுபவராக இருப்பதுடன் முரீதுப் பிள்ளைகள் மனமுவந்து தூய்மையான எண்ணத்துடன் ஏதேனும் ஹதியாக்கள் தந்தாள் மட்டுமே ஒப்புக்கொள்பவராகவும் இருப்பார்.
- ஏதேனும் சருகுதல்கள் எட்பட்டுவிடின் உடனடியாக தவ்பா செய்து மீண்டு விடுவார்கள். (அத் தஸவ்வுப்- பக்கம் 90 )
- முரீதுப் பிள்ளைகளை ஒப்புக் கொள்வதன் மீது பேராசை கொள்ளாமல் ஞானப் பாட்டையும் நுட்பத்தையும் முக்கியத்துவத்தையும் கடின முறையைக் கையாளாமல் அவர்களுக்கு இதமாக போதிப்பவராகவும் இருப்பார்.
- தனது முரீதுப் பிள்ளை தன்னல்லாத மற்ற ஞான குருமார்களை விடுத்து தன்னை மட்டுமே பற்றிப் பிடிப்பவராக இருக்கிறாரா? என்பதைப் பரீட்சித்துப் பார்த்து உண்மையானவராகவும் அதில் ஆசை கொண்டவராகவும் மனத்தூய்மை உள்ளவராகவும் இருப்பதாக பெற்றுக் கொண்டால் அவரை மனமுவந்து ஏற்று ஒரு எஜமான் ஒரு அடிமையை எவ்வாறு கவனித்துக் கொள்வாரோ அது போன்று கவனித்துக் கொள்வதுடன் தன சொந்த மகனை வளர்ப்பது போன்று வளர்த்து வருவதுடன் ஒழுக்க முறைகளையும் கற்பிப்பவராக இருப்பார்.
- முரீதுக்கு ஏற்படுகின்ற சிறு குற்றங்களை பெரிது படுத்தாமல் இருப்பார் மறதியாகவோ அல்லது போடு போக்காகவோ ஏற்பட்டுவிட்ட தவறுகளை உடனடியாக பிடித்து விடாமல் சற்று விட்டுப் பிடிப்பவராக இருப்பார். ஆனால் தாம் ஏவிய கட்டளைக்கு மாறுபடுதலின் பால் சேர்த்து வைக்கின்ற வகையிலோ அல்லது தமது சொல், செயல்களின் மீது குறுக்கீடு தெரிவிப்பது அளவில் சேர்த்து வைக்கின்ற வகையிலோ முரீதின் செயல் அமைந்திருக்குமாயின் உடனடியாக அவனை கண்டிப்புடன் எச்சரிக்கை செய்வார் அந்த செயல்களில் இருந்து நீங்கி பிழை பொறுக்கத் தேடி அதற்காக கவலையும் கொண்டால் திரும்ப அது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று நிபந்தனை இடுபவராக இருப்பார். (ரூஹுல் பயான் பாகம் 05 பக்கம் 278 )
- அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்றாடம் இரவு நேரங்களில் தனித்திருந்து தியானத்தில் ஈடுபடுவது போல ஒவ்வொடு நாளும் தஹஜ்ஜுத் மற்றும் இறை வணக்கங்களை நிறைவேற்றி வருவார்.
- தன் முரீதுகளின் நிலைமைக்கு தக்கவாறு தாம் மிகவும் கீழே இரங்கி அவர்களுடன் நற்குணத்துடன் நடந்து கொள்வதுடன் அவர்களின் அறிவுக்குத் தகுந்தவாறு பேசுவார்.
- முரீதிடம் ஒரு வெறுப்பான காரியத்தையோ அல்லது அவரின் செயல்களில் தற்பெருமையையோ கண்டால் அதை அப்படியோ பலர் முன் போட்டு உடைத்து அவர் மனதை புண் படுத்தி விடாமல் பல முரீதுகள் ஒன்று கூடும் சந்தர்ப்பம் பார்த்து பொதுவாக சுட்டிக் காட்டி அவர் திருந்துவதுடன் மற்ற முரீதுகள் பயன் பெரும் வகையில் எடுத்துக் கூறுவார்.
- முரீதுகளின் இரகசியங்களை பாதுகாத்து வைப்பார் (அல் அவாரிப்-பக்கம் 273)
- சம்பூரண ஷெய்கு என்பவர் பிரார்த்தனையின் பலனாக தமது முரீதை ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலையின் பால் திருப்புகின்ற தகைமையும் ஒரு தரத்திலிருந்து வேறொரு தரத்தின் பால் உயர்த்துகின்ற தகுதியும் பெற்ற வணக்க சாலியான ஆலிமாவார். (மார்க்க அறிஞராவார்) (அத்தஸவ்வுப் - பக்கம் 90 )
- தமது முரீதுப் பிள்ளை தமது செய்கைகளில் குறைகாணும் வகையில் குறுக்கீடுகள் தெரிவித்தாலோ அல்லது பிரிவை ஏற்படுத்தி வைக்கின்ற காரியங்களில் ஈடுபட்டாலோ உடனடியாக தம்மை விட்டும் அவரைப் பிரித்துவிடாமல் ஓரிரு முறைகள் மன்னிப்பு வழங்குவார். மூன்றாவது முறையாக செய்தால் அவரை பிரித்து விடுவார். அப்படி பிரியாவிடை கொடுக்கும் போது தான் செய்ததற்கான அந்தரங்கக் காரணத்தை கூறி அவருக்குத் தேவையான உபதேசங்களையும் செய்து அனுப்பி வைப்பார். (ரூஹுல் பயான் பாகம் 05 பக்கம் 283 )