ஷஹீத் என்றால் யார்?

Posted by islamiyailakku on 10:26 AM
 அஸ்ஸலாமு அலைக்கும்.

உலகமெங்கும் வாழும் சூபிச வழி வாழ் முஸ்லீம்கள் இம்மாதம் கஞ்சே ஷவா ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் அவர்களது நினைவு நாளை கொண்டாடி வருகிறார்கள். இவர்களது புனித அடக்கஸ்தலம் இந்தியாவில் தமிழ் நாட்டில் நாகூர் என்ற ஒரு பட்டினத்தில் அமைத்திருக்கிறது.

மகான் உலகிலே வாழ்ந்த காலத்தில் இறைவனுக்காக அவனுடைய மார்கத்துக்காக தனது வாழ்வின் ஒவ்வொரு நொடிகளையும் அர்ப்பணித்தார்கள்.

காரணக் கடல் என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படும் மகான் அவர்கள் இன்றும் தான் வாழும் இடத்தில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ * فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ * يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ


அவர்களால் அற்புதம் நிகழ்த்தப் படுகிறது என்பதற்கு மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனம் ஹிதாயத் பெற்றவர்களுக்கு சான்றாகும். சில குதர்க்க வாதிகள் அவ்லியாக்கள் மரணித்த பின் மண்ணோடு மண்ணாகி விடுகிறார்கள் என்று வாதிட்டு திரிகிறார்கள். அவர்களது அறியாமைக்கு நாம் பொறுப்பாக முடியாது.

 மேலே சொன்ன வசனம் அவர்கள் அற்புதம் இன்றும் நிகழ்த்துகிறார்கள் என்பதற்கு எப்படி ஆதாரமாக அமையும் என்று நீங்கள் கேட்கலாம். ஆம் ஆழமாக சிந்தனை செய்தால் அது ஆதாரமாக அமையும். 

உயிரோடு இருக்கும் போது வலிமார்கள் கறாமத் நிகழ்த்துவார்கள் என்பதிலே எமக்கு சந்தேகம் இல்லை. இங்கே எழும் கேள்வி மரணித்தபின் கறாமத் காட்ட முடியுமா? முடியாதா? என்பதுதான். 
அப்படி என்றால் நாம் ஒரு விடயத்தை தெளிவாக ஆராய்ந்தால் அதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். 
அவ்லியாக்கள் நபிமார்களுக்கு மரணம் உண்டா? இல்லையா? என்று கேட்டால் இல்லை என்றுதான் நம்ப வேண்டும். ஏன் என்றால் அல்லாஹ் அவனது அருள் மறையிலே மேலே சொன்ன வசனத்திலே சொல்கிறான்.
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ 
அல்லாஹ்வுடைய பாதையிலே  ஷஹீத் ஆனவர்களை மரணித்தவர்கள் என்று எண்ணிக் கொள்ளவேண்டாம். அனால் அவர்கள் அவர்களது றப்பிடத்திலே உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் உணவளிக்கப் படுகிறார்கள். 
எனவே மேற்கூறிய வசனம் மூலம் அல்லாஹ்வுடைய பாதையிலே ஷஹீத் ஆனவர்கள் மரணிக்கவில்லை அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் உணவும் கொடுக்கப் படுகிறார்கள். மரணித்தவர்கள் என்று எண்ணிக் கொள்வது, நம்புவது, அதை பிரச்சாரம் செய்வது அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாறு செய்வதாகும். 
அப்படி என்றால் நீங்கள்; அவ்லியாக்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய பாதையிலே ஷஹீத் ஆனவர்களா?  என்ற ஒரு கேள்வியை முன் வைக்கலாம். ஆம் அது கூட சாதாரமாக தெளிவான விடயமே தவிர மறைவானதோ அல்லது ஆழமாக ஆராயப்படவேண்டிய விடயமோ அல்ல. அல்லாஹ்வால் ஹிதாயத் என்ற அருள் கொடுக்கப்பட்ட சிந்தனை உள்ளவர்களுக்கு பசுமரத்து ஆணியாக நாம் சொல்லும் விடயங்கள் அமையும். 
பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றிலே மிக பிரபலமானதும் பெரிய யுத்தமும்  ஆகும். இப்படியான பெரியதோர் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பும் போது நபிகள் கோமான் (ஸல்-அம்) அவர்கள். நாம் சிறிய யுத்தத்தில் இருந்து பெரிய யுத்தம் அளவில் மீண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். 

சஹாபாக்கள் அதிர்ச்சியுடன் நாயகமே எத்தனை உயிர் தியாகம். எவ்வளவு பெரிய யுத்தம் இதை முடித்து நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம் ஏன் நாயகமே இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்க பெருமானார் (ஸல்-அம்) அவர்கள். வாளேந்தி போராடுவது பெரிய யுத்தமல்ல தனது நப்ஸ் என்ற மனோ இச்சையுடன் போராடுவதே பெரிய யுத்தம் என்று சொன்னார்கள். 
இதிலிருந்து மனோ இச்சையை கொள்வதே பெரிய யுத்தம்; அதை செய்பவரே உயர்வான ஷஹீத் என்பது எமக்கு தெளிவாகிவிட்டது.
அவ்லியாக்கள் என்பவர்கள் இறை நேசத்தை பெற்ற நன்மக்கள். அவர்கள் தமது மனோ இச்சையை அழிக்காமல் அவனை நெருங்கி இருக்க முடியாது. அப்படி மனதோடு போராடி அதை வெல்லாதவர் ஒரு இறை நேசராக இருக்க முடியாது. 
ஏன் 

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

அதாவது நப்சுகள் 7 என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
  1. அம்மாராஹ்.
  2. லவ்வாமாஹ்.
  3. முல்ஹிமாஹ்.   
  4. முத்மஇன்னஹ் 
  5. ராழியஹ்
  6. மர்லிய்யஹ்.
  7. காமிலஹ். 
  இந்த எழு நப்சுகளிலும் அல்லாஹ் முத்மஇன்னஹ் என்ற நான்காவது நப்சை விழித்தே மேற்சொன்ன வசனத்தில் தன்பக்கம் மீண்டு வருமாறு அழைக்கிறான். அப்படியாயின் ஒரு அடியான் தன றப்பை நெருங்குவது என்றால் முதல் மூன்று நப்சுகளை அவன் கொன்றொழிக்க வேண்டும். இல்லை என்றால் அவனால் தனது றப் அளவில் மீள முடியாது. 

அவ்லியாக்களை கொண்டு  வசீலா தேடினால் சிலர் அல்லாஹ் அடியானது பிறடி நரம்பை விட நெருங்கி இருக்கும் போது எதற்கு இன்னொருவரின் உதவி? என்று கேட்கிறார்கள். அது நியாயம்தான். ஆனால் உண்மை என்ன? அவன்தான் உன்னை நெருங்கி இருக்கிறானே! அவனை எப்போதாவது நீ கண்டதுண்டா? காண்பது ஒரு புறம் இருந்தாலும் அவனிடமிருந்து எதையாவது நீ கேட்டதுண்டா? இல்லை. அப்படி என்றால் அவன்தான் உன்னை நெருங்கி இருக்கிறானே ஒழிய அவனை நீ நெருங்கவில்லை. இன்னும் முதலாவது நப்சை கூட நீ அளிக்கவில்லை என்பதே அர்த்தம். எனவே சிந்திப்பவனுக்கு இது விருந்தாகும். சிந்தனை அற்றவனுக்கு இது மருந்தாகும்.
எனவேதான் இப்படியான நப்சை அழித்து காமிலஹ் என்ற சம்பூரண நிலையான எலாம் நப்சை எட்டிய மகான்கள் அல்லாஹ்வுடைய பாதையிலே ஷஹீதானவர் என்பதிலே என்ன சந்தேகம் இருக்கிறது! அவர்கள் உயிருடன் வாழ்கிறார்கள் உணவளிக்கப் படுகிறார்கள் என்பதிலே என்ன ஆச்சரியம் இருக்கிறது? எனவே உயிருடன் உள்ள வலிமார்கள் கறாமத் நிகழ்த்துவார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லாமல் போகிறது.
எனவே அல்லாஹ் எமது ஈமானை வலுவடையச் செய்வதோடு. உண்மை நிலையை எமது சகோதரர்களுக்கும் புரிய வைப்பானாக. ஆமீன். 
எமது இஸ்லாமிய இலக்கு நாகூர் நாயகம் அவர்க்களுக்காக பாடப்பட்ட சில இனிய இஸ்லாமிய கீதங்களை உங்களுக்காய் வழங்குகிறது. 

 
Categories: ,